2015-05-19 15:24:00

கடுகு சிறுத்தாலும் - கணணி பார்த்து வைத்த கணவர்...


கணணி வழியே கணவன், மனைவியைத் தேடித்தரும் அலுவகத்திற்குள் ஓர் இளம்பெண் நுழைந்தார். அங்கு ஒரு கணணிக்கு முன் அமர்ந்திருந்தவரிடம் தனக்கு ஒரு கணவன் தேவை என்று கூறினார். "எவ்வகையான கணவர் உங்களுக்குத் தேவை?" என்று அவர் கேட்டார். அப்பெண் அவரிடம், "பார்க்க அழகாக, பண்புள்ளவராக, அதே சமயம் நகைச்சுவை உணர்வு கொண்டவராக, விளையாட்டில் ஆர்வம் உடையவராக, பொது அறிவு நிறைந்தவராக இருக்கவேண்டும். அவருக்கு நன்றாக ஆடவும், பாடவும் தெரிந்திருக்கவேண்டும். நான் வீட்டில் இருக்கும்போதெல்லாம் என்னுடனேயே இருக்கவேண்டும். எனக்கு நல்ல, சுவாரசியமான கதைகள் சொல்லவேண்டும். நான் ஓய்வெடுக்க விரும்பினால், அமைதியாக இருக்கவேண்டும்" என்று இளம்பெண் தன் தேவைகளைப் பட்டியலிட்டார்.

அவர் சொன்ன அனைத்து விவரங்களையும் கணணியில் பதிவு செய்தபோது, "நீங்கள் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினால், மகிழ்வுடன் வாழ்வீர்கள்!" என்ற பதில் வந்தது.

தொலைக்காட்சிப் பெட்டியை வாழ்க்கைத் துணையாகக் கொண்டு வாழ்வோரின் எண்ணிக்கை, ஒவ்வொருநாளும் கூடிவருகிறதோ என்ற அச்சம் நமக்குள் எழுவது, உண்மைதானே!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.