2015-05-19 16:13:00

எந்த ஒரு மரண தண்டனையையும் திருஅவை நியாயப்படுத்தாது


மே,19,2015. எகிப்தின் முன்னாள் அரசுத்தலைவர் Mohamed Morsi அவர்களுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறித்து எகிப்திலும், பிற நாடுகளிலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுவரும் இவ்வேளையில், இத்தீர்ப்பு எகிப்திய கிறிஸ்தவர்களின் மனசாட்சியைக் கேள்விக்கு உள்ளாக்கி இருக்கின்றது என்று அந்நாட்டு காப்டிக் கத்தோலிக்க ஆயர் ஒருவர் கூறினார்.

இம்மரண தண்டனை தீர்ப்பு குறித்து பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய எகிப்தின் Assiut ஆயர் Anba Kyrillos William அவர்கள், Morsi அவர்கள் அரசுத்தலைவராகப் பணியாற்றிய காலத்தில் மக்கள் அனுபவித்த துன்பங்களை அவர்கள் மறக்கவில்லை, எனினும், திருஅவை எந்த ஒரு மனிதரின் மரண தண்டனையையும் ஒருபோதும் நியாயப்படுத்தாது என்று கூறினார்.

திருஅவை, நீதிமன்றத்தின் தனித்துவத்தை மதிக்கின்றது, அதேநேரம், வாழ்வதென்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்பதிலும் நம்பிக்கை கொண்டுள்ளது, எனவே மரண தண்டனையை எதிர்க்கின்றது என்றும் கூறினார் ஆயர் Anba Kyrillos.

Morsi அவர்களின் மரண தண்டனை தீர்ப்பு உறுதி செய்யப்படுமா அல்லது அது ஆயுள் தண்டனையாக மாற்றப்படுமா என்பது, எகிப்தின் Al-Azhar முஸ்லிம் தலைவர், வருகிற ஜூன் 2ம் தேதி வழங்கவிருக்கும் இறுதி தீர்ப்பைப் பொருத்தே உள்ளது என்றும் கூறினார் ஆயர் Anba Kyrillos.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.