2015-05-18 16:15:00

புருண்டியின் அமைதிக்காக செபிக்க திருத்தந்தை விண்ணப்பம்


மே,18,2015புனிதர் பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்த குழுக்களின் பிரதிகளுக்கும், பாலஸ்தீன அதிகாரிகளுக்கும், அல்லேலூயா வாழ்த்தொலி உரையின்போது, தன் தனிப்பட்ட நன்றிகளை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

"பாலஸ்தீனம், பிரான்ஸ், இத்தாலி, இஸ்ரயேல், ஜோர்டன் ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த பிரதிநிதிகளுக்கு நன்றியை வெளியிட்டதுடன், புதிய புனிதர்களின் கருணை, பிறன்பு மற்றும் ஒப்புரவின் எடுத்துக்காட்டுக்களால் நாம் தூண்டப்படுவோமாக எனவும் வேண்டினார் திருத்தந்தை.

தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில், புருண்டி நாட்டில் தற்போது இடம்பெற்றுவரும் பதட்ட நிலைகளைக் குறிப்பிட்டு அந்நாட்டிற்கான செபத்திற்கும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வன்முறைகளைக் கைவிட்டு, தேச நலனை மனதில் கொண்டு அனைத்து புருண்டி மக்களும் செயல்படுமாறு விண்ணப்பம் ஒன்றையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்தவாரம் புருண்டி நாட்டில் இடம்பெற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் தோல்வியைத் தொடர்ந்து, அந்நாட்டில் உருவாகியுள்ள வன்முறைகளில் இதுவரை ஏறக்குறைய 20 பேர் உயிரிழந்துள்ளனர், பல ஆயிரக்கணக்கானோர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.

உலகின் மிகவும் வறுமைப்பட்ட நாடுகள் பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தைக் கொண்டிருக்கும் புருண்டி நாட்டின் 1 கோடியே, 4 இலட்சம் மக்கள் தொகையில் ஏறத்தாழ 60 விழுக்காட்டினர் போதிய உணவின்றி துன்புறுகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.