2015-05-18 16:20:00

Pax Christi உலக மாநாட்டின் இறுதி அறிக்கை


மே,18,2015. இவ்வுலகம் போரினால் பிளவுபட்டிருந்தபோது, ஒப்புரவு, சாத்தியமான ஒரு வழி என்றும், பகைவரையும் அன்பு செய்யமுடியும் என்றும் நம்பியதால், Pax Christi அமைப்பு 70 ஆண்டுகளுக்கு முன் உருவானது என்று, இந்த கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு கூறியுள்ளது.

மே 13, கடந்த புதன் முதல், 17, இஞ்ஞாயிறு முடிய, பாலஸ்தீன நாட்டின் பெத்லகேமில்

நடைபெற்ற Pax Christi உலக மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கை இவ்வாறு துவங்குகிறது.

Pax Christi அமைப்பைச் சேர்ந்தவர்கள், சமுதாயத்தின் விளிம்புகளில் வாழ்வோரைத் தேடிச் சென்று, அவர்களின் துயர் துடைப்பதில் முழு மனதோடு ஈடுபட்டு வருகின்றனர் என்று இவ்வறிக்கை எடுத்துரைக்கிறது.

வறுமை, வேலைவாய்ப்பின்மை, சமுதாயப் புறக்கணிப்பு என்ற பிரச்சனைகளைச் சந்திக்கும் இன்றைய இளையோர், அடிப்படைவாதக் குழுக்களால் பல்வேறு வழிகளில் ஈர்க்கப்படும் ஆபத்தை எதிர்த்துப் போராட, Pax Christi அமைப்பு, முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வன்முறைக்கு, வன்முறை வழியாகவே பதில் சொல்லிவரும் இவ்வுலகின் நச்சுத்தன்மை நிறைந்த வளையத்தை உடைத்து, மன்னிப்பு, ஒப்புரவு ஆகிய விழுமியங்களை வளர்ப்பது, Pax Christiன் அடுத்த ஐந்தாண்டு காலத் திட்டங்களில் ஒன்று என்று இம்மாநாட்டின் இறுதியில் வெளியான அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.