2015-05-16 16:38:00

ரோஹின்யா இனத்தவர்க்கெதிரான பாகுபாடுகள் நிறுத்தப்பட அழைப்பு


மே,16,2015. ரோஹின்யா முஸ்லிம் சிறுபான்மை இனத்தவர்கெதிராக மியான்மார் அரசு நடத்திவரும் பாகுபாடுகள் நீக்கப்படாதவரை, குடிபெயர்வோர் வங்காள விரிகுடா வழியாக உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்ளும் பயணம் தொடரும் என்று ஐ.நா. மனித உரிமைகள் நிறுவன இயக்குனர் இவ்வெள்ளியன்று எச்சரித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் உயர் இயக்குனர் Zeid Ra’ad Al Hussein அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், கடல் பகுதிகளில் ஆபத்தான நிலைகளை எதிர்நோக்கும் குடிபெயர்ந்தோரின் வாழ்வைப் பாதுகாப்பதற்கு தென் கிழக்கு ஆசிய நாடுகளின் அரசுகள் துரித நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

படகுப் பயணம் மேற்கொண்டு ஆபத்தான நிலையிலுள்ள குடிபெயர்ந்தோரை, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகள் மீண்டும் படகுகளிலே திருப்பி அனுப்புகின்றன என்ற செய்தி கவலை தருகின்றது என்றுரைத்துள்ளார் Zeid.

நாடுகளின் இந்நடவடிக்கை தவிர்க்க முடியாத உயிரிழப்புக்களையே ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ள Zeid, நாடுகளின் நடவடிக்கைகள், மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதேயல்லாமல், அவர்களை மேலும் ஆபத்தில் தள்ளுவதாக இருத்தல் கூடாது என்றும் கூறியுள்ளார்.

மேலும், அந்தமான் கடல் பகுதி மற்றும் மலாக்கா நீர்ப்பகுதிகளில் கடத்தல்காரர்களின் படகுகளில் கைவிடப்பட்ட பல்லாயிரக்கணக்கான குடிபெயர்ந்தோரை ஏற்பதற்கு சில தென்கிழக்கு ஆசிய நாடுகள் மறுப்பது குறித்த அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார் பான் கி மூன்.

மே 10ம் தேதி இந்தோனேசியா 582 பேரையும், மலேசியா 1,018 பேரையும் ஏற்றுள்ளதைப் பாராட்டியுள்ள Zeid அவர்கள், திருப்பி அனுப்பும் மனிதமற்ற செயல்கள் மனித உயிர்களுக்கு ஆபத்தாக முடியும் என்றும் கூறியுள்ளார்.

மியான்மார் மற்றும் பங்களாதேஷ் நாடுகளிலிருந்து கடந்த ஆண்டில் படகுகளில் வெளியேறிய குடிபெயர்ந்தோரின் எண்ணிக்கை 53 ஆயிரம். மேலும், 2014ம் ஆண்டு செப்டம்பர் முதல் இவ்வாண்டு மார்ச் வரை வங்காள விரிகுடாவில் உயிரிழந்த குடிபெயர்ந்தோரின் எண்ணிக்கை ஏறக்குறைய 920. இவர்களில் பெரும்பான்மை மக்கள், மியான்மாரின் ரக்கின் மாநிலத்தில் அடக்குமுறைகளுக்கு அஞ்சி வெளியேறிய ரோன்ஹின்யா இனத்தவர் என்று ஐ.நா. அகதிகள் நிறுவனம் கூறுகிறது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.