2015-05-16 15:46:00

திருத்தந்தை, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு வாழ்வோர் சந்திப்பு


மே,16,2015. உரோம் மறைமாவட்டத்தில் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு வாழும் ஆயிரக்கணக்கான துறவறத்தாரை இச்சனிக்கிழமையன்று அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

காலை 11 மணிக்குத் ஆரம்பித்த இந்நிகழ்வின் முதல் கட்டமாக, பாடல்கள், செபங்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் பணிசெய்தவரின் சாட்சியங்கள் போன்றவை இடம்பெற்றன.

இரண்டாவது கட்டமாக, உரோம் மறைமாவட்ட திருத்தந்தையின் பிரதிநிதி கர்தினால் வல்லினி அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்றுப் பேசிய பின்னர், நான்கு பேரின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அர்ப்பணிக்கப்பட வாழ்வின் சிறப்பையும், அடைபட்ட துறவு வாழ்வு பற்றியும் கூறிய  திருத்தந்தை, இறைவன் நம்மை முதலில் சந்தித்ததை நாம் மறந்தால் செபத்தின் மீதான ஆர்வம் குறையும் என்று கூறினார்.

திருஅவை மற்றும் அன்னை மரியின் அடையாளமாக அருள்சகோதரிகள் உள்ளனர், திருஅவை பெண்மைத் தன்மை கொண்டது, இதனால் திருஅவை இயேசுவின் மணவாட்டி என்று அழைக்கப்படுகின்றது என்பதை மறக்க வேண்டாம் என்றும் கூறினார் திருத்தந்தை.

அர்ப்பணிக்கப்பட வாழ்வு வாழ்வோர் ஆண்டு இவ்வாண்டில் சிறப்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  

மேலும், “தெருவில் இருக்கும் தன்னையே முடக்கிக்கொண்ட நோயாளித் திருஅவையைவிட காயம்பட்ட திருஅவையைக் கொண்டிருப்பது மேல்” என்று இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.