2015-05-16 16:43:00

குழந்தைத் தொழிலாளர் சட்டத் திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு


மே,16,2015. 14 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் தங்களுடைய குடும்பப் பாரம்பரிய தொழிலைச் செய்யவும் கலைத் துறைகளில் பணியாற்றவும் அனுமதியளிக்கும் வகையில் குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள இந்திய மத்திய அமைச்சரவை அனுமதி அளித்திருப்பதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.

குழந்தைகளை வேலைகளில் ஈடுபட அனுமதித்தால், அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது என்று குழந்தைகள் நல உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள இச்சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தால், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பள்ளி சென்று திரும்பிய பிறகு, ஓய்வு நேரங்களிலும் தங்களுடைய குடும்பத் தொழில்களிலும் விவசாய வேலைகளிலும் ஈடுபடலாம்.

சர்க்கஸ் தவிர, பிற கலை மற்றும் பொழுதுபோக்குத் தொழில்களில் குழந்தைகள் ஈடுபடுவது இந்தச் சட்டத்தின் மூலம் சட்டப்பூர்வமாக்கப்படும்.

இருந்தபோதும், ஆபத்தான தொழில்களில் குழந்தைகளை ஈடுபடுத்தினால் அளிக்கப்படும் தண்டனை கடுமையாக்கப்பட்டிருக்கிறது.

இந்திய அரசின் இந்த முடிவுக்கு, அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.