2015-05-16 15:56:00

இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா - ஞாயிறு சிந்தனை


சிறந்த இசை நாடகங்களை (Opera) உருவாக்கியதால் புகழ்பெற்ற இத்தாலியக் கலைஞர், ஜியாக்கமோ புச்சீனி (Giacomo Puccini) அவர்கள், 1922ம் ஆண்டு, ‘துராந்தோத்’ (Turandot) என்ற இசை நாடகத்தை உருவாக்கத் துவங்கினார். அதே வேளையில், அவருக்கு, தொண்டையில் புற்றுநோய் இருந்ததென கண்டுபிடிக்கப்பட்டது. தனது மரணத்திற்கு நாள் குறித்தாயிற்று என்பதை உணர்ந்த புச்சீனி அவர்கள், தன் இறுதி இசை நாடகத்தை முடிப்பதற்காக இரவும், பகலும் அயராது உழைத்தார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மாணவர்கள் அனைவரும் எவ்வளவோ சொல்லியும், அவர் தன் பணியை ஓய்வின்றி தொடர்ந்தார்.

ஒருநாள் அவர் தன் மாணவர்களை அழைத்து, "ஒருவேளை, நான் இந்த இசை நாடகத்தை முடிப்பதற்கு முன் இறந்துபோனால், நீங்கள் இந்த நாடகத்தை உருவாக்கி முடிக்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். அவர் பயந்தபடியே,  ‘துராந்தோத்’ இசை நாடகத்தை முடிப்பதற்கு முன், 1924ம் ஆண்டு புச்சீனி அவர்கள் மரணமடைந்தார். தங்கள் குருவின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது மாணவர்கள் ஒன்று சேர்ந்து, ‘துராந்தோத்’ இசை நாடகத்தை எழுதி முடித்தனர்.

1926ம் ஆண்டு, இத்தாலியின் மிலான் நகரில் இந்த இசை நாடகம் முதன்முறையாக அரங்கேறியது. புச்சீனி அவர்களின் பாசத்திற்குரிய மாணவர் Toscanini என்பவர், அந்த இசை நாடகத்தின் இசைக்குழுவை இயக்கினார். புச்சீனி அவர்கள் உருவாக்கிய முதல் பகுதி அற்புதமாக அரங்கேறியது. அப்பகுதி முடிவுற்றபோது, நடிகர்கள், இசைக் குழுவினர் அனைவரும் இசை நாடகத்தை நிறுத்தினர். அதுவரை இசைக்குழுவை இயக்கிவந்த Toscanini அவர்கள், தன் கையிலிருந்த கோலை கீழேவைத்துவிட்டு, மக்கள் பக்கம் திரும்பி, "இதுவரை நீங்கள் இரசித்த இப்பகுதியை எங்கள் குரு உருவாக்கினார்; பின்னர், இறந்தார்" என்று, கண்களில் கண்ணீர் பொங்க சொன்னார்.

அரங்கத்தில் ஆழ்ந்த அமைதி நிலவியது. சில நிமிடங்கள் சென்று, Toscanini அவர்கள், தன் கண்ணீரைத் துடைத்தபடி, "ஆனால், அவரது சீடர்கள், குருவின் பணியை முடித்தனர்" என்று சொல்லி, இசைக்குழுவை வழிநடத்தும் கோலை மீண்டும் கையில் எடுத்து, இசை நாடகத்தைத் தொடர்ந்தார். நாடகம் முடிந்தபின், அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று, தொடர்ந்து, நீண்டநேரம் கரவொலி எழுப்பினர். குருவும், சீடர்களும் இணைந்து உருவாக்கிய ‘துராந்தோத்’ இசை நாடகம், இன்றும் இசையுலகில் தனியிடம் பெற்ற ஒரு கலைப்படைப்பு.

குருவாகிய கிறிஸ்துவும், அவரது சீடர்களும் இணைந்து உருவாக்கிய 'நற்செய்தி' என்ற அற்புதப் படைப்பைச் சிந்திக்க இஞ்ஞாயிறு நமக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று, இயேசுவின் விண்ணேற்ற விழாவைக் கொண்டாடுகிறோம். அதே வேளையில், இயேசுவின் பணியை இவ்வுலகில் தொடர்ந்து நிறைவேற்றிய சீடர்களின் அர்ப்பணத்தையும், அயரா உழைப்பையும், துணிவையும் இந்நாளில் கொண்டாடுகிறோம்.

இயேசுவின் விண்ணேற்ற நிகழ்வு, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியோரின் நற்செய்திகளிலும், திருத்தூதர் பணிகள் நூலிலும் கூறப்பட்டுள்ளது. இந்நூல்களில் காணப்படும் விண்ணேற்ற நிகழ்வை ஒப்புமைப்படுத்திப் பார்த்தால், பல வேறுபாடுகள் உள்ளன. இந்நிகழ்வு, எருசலேமில், கலிலேயாவில் அல்லது பெத்தானியாவில் நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. இயேசுவின் விண்ணேற்றம், உயிர்ப்புக்குப் பின் உடனே நிகழ்ந்ததா, அல்லது 40 நாட்கள் கழிந்து நிகழ்ந்ததா, என்பதிலும் தெளிவு இல்லை. இந்நிகழ்வு எங்கே, எப்போது நிகழ்ந்தது என்பதில் வேறுபாடுகள் இருந்தாலும், இந்நிகழ்வின்போது இயேசு கூறிய செய்தியில் ஓரளவு ஒப்புமைகள் உள்ளன. மிகவும் ஆழமான, சக்தி வாய்ந்த செய்தி அது.

இயேசுவின் விண்ணேற்ற நிகழ்வை, ஒரு வரலாற்றுப் பதிவாகக் காட்டுவதில் புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள், அதிக கவனம் செலுத்தாமல், இந்நிகழ்வின்போது இயேசு கூறிய செய்தியில் அதிகக் கவனம் செலுத்தியுள்ளனர் என்பதை நாம் உணரலாம். எனவே, விண்ணேற்றத்தின்போது இயேசு தன் சீடர்களிடம் கூறிய இறுதிச் செய்தியை நமது ஞாயிறு சிந்தனையின் மையமாக்குவோம்.

மாற்கு நற்செய்தி 16: 15-18

அக்காலத்தில், இயேசு பதினொருவருக்குத் தோன்றி, அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று கூறினார்.

“உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்று இயேசு கூறிய வார்த்தைகள், கிறிஸ்தவ வரலாற்றில் பலவழிகளில் பொருள் கொள்ளப்பட்டுள்ளன. இதனால் நன்மைகள் விளைந்துள்ளன. பிரச்சனைகளும் எழுந்துள்ளன. நற்செய்தியை யார் பறைசாற்றுவது? அதை எப்படி பறைசாற்றுவது? என்ற கேள்விகள் கிறிஸ்தவ வரலாற்றில் அடிக்கடி எழும் கேள்விகள். பொதுவாக, நற்செய்தியைப்  பறைசாற்றுதல் என்றதும், கோவில்களில், மேடைகளில் முழங்கக்கூடிய ஒரு சக்திவாய்ந்த மறையுரையாக இதை நாம் எண்ணிப்பார்க்கிறோம். இந்தக் கோணத்தில் இவ்வார்த்தைகளை நாம் சிறைப்படுத்திவிடுவதால், குருக்கள், துறவியர், என்ற ஒரு குறுகிய குழுவுக்கு இந்தப் பணியை ஒதுக்கிவைத்து விடுகிறோம்.

இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடர்களுக்குக் கொடுத்துள்ள கட்டளையை ஆழமாக சிந்திக்கும்போது, நமது எண்ணங்கள் முழுமையான எண்ணங்கள் அல்ல என்பதைப் புரிந்துகொள்ளலாம். 'நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்' என்று இயேசு கூறியபோது, அந்தக் குழுவில் இருந்தவர்கள் யாரும் அருள்பணியாளரோ, துறவியோ அல்ல. அவர்கள் அனைவரும் குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருந்த சாதாரணத் தொழிலாளிகள். இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால், நாம் அனைவரும் நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணரலாம்.

'நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்' என்று இயேசு கூறிய அதே மூச்சில், அந்தப் பறைசாற்றுதலின் பல்வேறு விளைவுகளையும் கூறுகின்றார். நற்செய்தியில் நம்பிக்கை கொண்டவர்கள், பேய்களை ஓட்டுவர், உடல்நலமற்றோரைக் குணமாக்குவர், பாம்போ, கொடிய நஞ்சோ அவர்கள் உயிரைப் பறிக்காது என்ற அடையாளங்களை இயேசு இணைத்துக் கூறுகிறார்.

மேடைகளில், கோவில்களில் முழங்கப்படுவதோடு நற்செய்தியின் பறைசாற்றுதல் நின்று விடுவதில்லை. குணமளிக்கும் பணிகள், தீய சக்திகளை உலகினின்று விரட்டியடிக்கும் பணிகள் வழியே நற்செய்தியை நாம் பறைசாற்ற வேண்டும் என்பதை, இயேசு தெளிவுபடுத்துகிறார்.

வாய் வார்த்தைகளால் மேடைகளில் பறைசாற்றப்படும் நற்செய்தியைக் காட்டிலும், வாழ்க்கையால் உணர்த்தப்படும் நற்செய்திகள் இன்னும் ஆழமான தாக்கங்களை உருவாக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். வாழ்க்கையால் நற்செய்தியைப் பறைசாற்றிய பலரில், உலகப் புகழ்பெற்ற Albert Schweitzer என்ற மருத்துவரும் ஒருவர். இவர் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியொன்று இப்போது என் நினைவை நிறைக்கிறது.

இவர் ஆப்ரிக்காவில் மேற்கொண்ட அற்புதமான மருத்துவப் பணிகளுக்காகவும், அணு ஆய்வுகள் இவ்வுலகிற்குத் தேவையில்லை என்ற எண்ணத்தை உலகில் வளர்க்க அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் 1952ம் ஆண்டு, உலக அமைதிக்கான நொபெல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. இப்பரிசைப் பெற்ற அடுத்த ஆண்டு, அவர் அமெரிக்காவின் சிக்காகோ நகருக்கு இரயிலில் சென்றார். அவரை வரவேற்க பத்திரிக்கையாளர்களும், பெரும் தலைவர்களும் இரயில் நிலையத்தில் காத்திருந்தனர். Albert அவர்கள், இரயிலை விட்டு இறங்கியதும், கரவொலியும், காமிரா ஒளிவிளக்களும் அந்த இடத்தை நிறைத்தன. தன்னை சிறிது நேரம் மன்னிக்க வேண்டும் என்று வேண்டியபடி, Albert அவர்கள், அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு சென்றார். அந்த இரயில் நிலையத்தில் இரு பெட்டிகளைச் சுமந்தபடி, தடுமாறி நடந்துகொண்டிருந்த வயதான, கறுப்பின பெண்மணி ஒருவருக்கு உதவிசெய்து, அவரை ஒரு பேருந்தில் ஏற்றிவிட்டபின், தனக்காகக் காத்திருந்த கூட்டத்திடம் வந்தார் Albert. நடந்ததைக்கண்ட ஒரு பத்திரிகையாளர் மற்றொருவரிடம், "நான் இதுவரை கோவில்களில் மறையுரைகளைக் கேட்டிருக்கிறேன். இதுதான் முதல்முறையாக, ஒரு நடமாடும் மறையுரையைப் பார்த்திருக்கிறேன்" என்று கூறினார்.

Albert Schweitzer அவர்கள், 25 வயது இளைஞனாக இருந்தபோது, மறையுரை வழங்குவதில், இறையியல் வகுப்புக்கள் நடத்துவதில் தன்னிகரற்ற புகழ் பெற்றிருந்தார். ஆப்ரிக்க நாடுகளில் நிலவிவந்த தேவைகளைப் பற்றி கேள்விப்பட்ட Albert அவர்கள், தனது 30வது வயதில், பேராசிரியர் பதவியை விட்டுவிட்டு, மருத்துவம் படித்து, ஆப்ரிக்காவில் மிகவும் பின்தங்கிய ஒரு பகுதியில் மருத்துவ மனையொன்றை நிறுவி பணிசெய்யத் துவங்கினார். பல்வேறு இடர்கள், சிறைவாசம் என்று அவர் வாழ்வில் சவால்கள் வந்தாலும், வறுமையில் வாடிய ஆப்ரிக்க மக்களுக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவப் பணிகளைச் செய்துவந்தார். இளமையில் நற்செய்தியை வார்த்தைகளாய் முழங்கிப் புகழ்பெற்ற Albert அவர்கள், தன் வாழ்வின் பிற்பகுதியில் நற்செய்தியை வாழ்வாக்கினார்.

கோவில்களில், பிரசங்க மேடைகளில் பறைசாற்றப்படும் நற்செய்தியைவிட, இவ்வுலகை இறையரசாக மாற்றவேண்டும் என்ற அர்ப்பண உணர்வுடன் பணியாற்றிவரும் Albert போன்ற பல்லாயிரம் உள்ளங்களின் வாழ்வு பறைசாற்றியுள்ள நற்செய்தியே, இருபது நூற்றாண்டுகளாய், அதிகமாய், ஆழமாய் இவ்வுலகில் வேரூன்றியுள்ளது என்று சொன்னால், அது முற்றிலும் உண்மை. வாழ்வால் நற்செய்தியைப் பறைசாற்றுவதற்குப் பெரும் அறிவாளிகள், பேச்சாளர்கள் தேவையில்லை. இயேசுவின் சீடர்களே இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.

இயேசு விண்ணேற்றம் அடைந்ததும் நிகழ்ந்ததாய்ச் சொல்லப்படும் ஒரு கற்பனைக் கதை இது. இயேசு விண்ணகம் சென்றதும், தலைமைத்தூதர் கபிரியேல் அவரைச் சந்தித்தார். "உங்கள் பணியைத் திறம்பட முடித்துவிட்டீர்கள். உலகில் உங்கள் நற்செய்தியைத் தொடர்ந்து பரப்புவதற்கு என்ன திட்டங்கள் வைத்துள்ளீர்கள்?" என்று கேட்டார்.

"என்னுடையப் பணியைத் தொடரும்படி, ஒரு சில மீனவர்களிடமும், வரி வசூலிப்பவர்களிடமும் சொல்லியிருக்கிறேன்" என்று இயேசு சொன்னதும், கபிரியேல் தூதர் அவரிடம், "யார்... அந்தப் பேதுரு, தோமா இவர்களைப் பற்றிச் சொல்கிறீர்களா? அவர்களைப் பற்றித்தான் உங்களுக்கு நன்கு தெரியுமே... ஒருவர் உங்களைத் தெரியாது என்று மறுதலித்தார், மற்றொருவர் உங்களை நம்பவில்லை. இவர்களை நம்பியா இந்தப் பணியை ஒப்படைத்தீர்கள்? கட்டாயம் வேறு சில நல்ல திட்டங்கள் உங்கள் எண்ணத்தில் இருக்கவேண்டும், இல்லையா?" என்று கேட்டார்.

இயேசு அவரிடம் அமைதியாக, "நற்செய்திப் பணியை இவர்களை நம்பியே நான் ஒப்படைத்துள்ளேன். இவர்களைத்தவிர, என்னிடம் வேறு எந்தத் திட்டமும் கிடையாது" என்று பதிலளித்தார்.

இருபது நூற்றாண்டுகளைத் தாண்டி நற்செய்தி இன்றும் இவ்வுலகில் அர்த்தம் உள்ளதாக இருக்கிறது என்றால், அதற்குக் காரணம், தங்கள் அறிவுத்திறன் கொண்டு, வார்த்தைப் புலமை கொண்டு, நற்செய்தியைப் போதித்தவர்கள் அல்ல... நற்செய்தியும், அதன் மையமான இயேசுவும்தான் காரணம்.

இயேசுவும் அவர் வழங்கிய நற்செய்தியும் மையங்கள் என்பதை மறந்துவிட்டு, நற்செய்தியைப் போதிப்பவரின் புகழ், அவரது பேச்சுத் திறன் இவற்றை மையங்கள் என்று நாம் நம்பியபோதெல்லாம் பிரச்சனைகள் எழுந்துள்ளன என்பதை கிறிஸ்தவ வரலாறு மீண்டும் மீண்டும் நமக்குச் சொல்லித்தருகிறது.

வார்த்தைகளை அதிகம் கூறாமல், நற்செய்தியை வாழ்ந்து காட்டிய அசிசி நகர் புனித பிரான்சிஸ், மருத்துவர் Albert Schweitzer, அருளாளர் அன்னை தெரேசா என்று பல்லாயிரம் உன்னதப் பணியாளர்களின் வாழ்வால் நற்செய்தி இன்றும் நம்மிடையே வாழ்கிறது என்பதை எண்ணி, இறைவனுக்கு நன்றி சொல்வோம். வாழ்வாக மாறிய இந்த நற்செய்திகள் நமது மத்தியில் உலவும்போது, நஞ்சாகப் பரவிவரும் தீய சக்திகள் நம்மை அழித்துவிட முடியாது என்பதை மனதார நம்புவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.