2015-05-15 16:00:00

மன அழுத்தத்தால் பத்து வயது சிறார்கூட புகைப்பிடிக்கின்றனர்


மே,15,2015. பள்ளித் தேர்வு கொடுக்கும் மன அழுத்தத்தால் பத்து வயதுச் சிறார்கூட சிகரெட் பிடிக்கின்றனர் மற்றும் ஊக்கமளிக்கும் பானங்களைக் குடிக்கின்றனர் எனவும், உலகம் முழுவதும் 100 கோடிப் பேருக்கு புகைப்பழக்கமும் 24 கோடிப் பேருக்கு குடிப்பழக்கமும் இருப்பதாகவும் ஓர் ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.

“அடிமைப் பழக்கவழக்கங்கள் குறித்த அனைத்துலக புள்ளி விவரம்:2014 நிலை அறிக்கை” என்ற தலைப்பில், ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணை பேராசிரியர் லிண்டா கோவிங் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில்,  உலகில் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் ஏறக்குறைய 20 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் (100 கோடி) புகைப் பிடிக்கின்றனர் மற்றும் ஏறக்குறைய 5 விழுக்காட்டினர் (24 கோடி) மது அருந்துகின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.

இதுபோல ஹெராயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களுக்கு அடிமையானவர்கள் பற்றிய துல்லியமான புள்ளிவிவரம் சேகரிப்பது கடினம் எனினும்,  உலகம் முழுவதும் போதை ஊசி போட்டுக் கொள்பவர்கள் 1.5 கோடி பேர் என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

சட்டவிரோத போதைப் பொருட்களைவிட சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ள போதைப் பொருள்கள் சமூகத்துக்கு மிகப் பெரிய தீங்கை விளைவிக்கக் கூடியவை எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.

உலகிலேயே கிழக்கு ஐரோப்பியர்கள்தான் போதைப்பொருள்களுக்கு அதிக அளவில் அடிமையாகி உள்ளனர். அங்கு ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக ஒருவர் 13.6 லிட்டர் மது அருந்துவது தெரிய வந்துள்ளது. அடுத்தபடியாக வடக்கு ஐரோப்பியர்கள் 11.5 லிட்டர் மது குடிக்கின்றனர். மத்திய, தெற்கு மற்றும் மேற்கு ஆசியாவில் இது மிகக்குறைந்த அளவாக (2.1 லிட்டர்) உள்ளது எனவும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.