2015-05-15 15:54:00

திருத்தந்தை, உருமேனிய அரசுத்தலைவர் சந்திப்பு


மே,15,2015. உருமேனிய அரசுத்தலைவர் Klaus Werner Iohannis அவர்களை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் பொதுச் செயலர் பேராயர் Paul Richard Gallagher ஆகியோரையும் சந்தித்தார் உருமேனிய அரசுத்தலைவர் Iohannis.

திருப்பீடத்துக்கும், உருமேனிய நாட்டுக்கும் இடையே தூதரக உறவுகள் மீண்டும் உருவாக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இச்சந்திப்புகள் இடம்பெற்றதாகத் தெரிவித்த திருப்பீடச் செய்தித் தொடர்பகம், இவ்விரு நாடுகளுக்கிடையே நல்லுறவுகள் நிலவி வருவது குறித்த மகிழ்வும் வெளிப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தது.

உலகின் பல்வேறு பகுதிகளின் நிலவரம் குறித்தும் இச்சந்திப்புகளில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன எனவும் அச்செய்தித் தொடர்பகம் கூறியது.

1990ம் ஆண்டு மே 15ம் தேதி திருப்பீடத்துக்கும், உருமேனிய நாட்டுக்கும் இடையே தூதரக உறவுகள் மீண்டும் நிறுவப்பட்டன.

மேலும், சிறையில் உள்ள கைதிகளின் பிள்ளைகளை இம்மாதம் 30ம் தேதி சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்திக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.