2015-05-14 16:36:00

மரண தண்டனையை எதிர்த்து, பாப்புவா நியூ கினி ஆயர்கள்


மே,14,2015. பாப்புவா நியூ கினி மற்றும் சாலமோன் தீவுகளைச் சேர்ந்த ஆயர்களாகிய நாங்கள், மரண தண்டனை பயன்படுத்தப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று அந்நாட்டு ஆயர்கள் அறிக்கையொன்றை விடுத்துள்ளனர்.

கிறிஸ்தவ நாடு என்று தன்னையே கூறிக்கொள்ளும் எந்த நாட்டிலும், மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும் என்று ஆயர்களின் அறிக்கை வலியுறுத்துகிறது.

ஒரு நாட்டின் அரசு, மரண தண்டனையை அதிகாரப் பூர்வமாக மேற்கொள்ளும்போது, அந்நாட்டு மக்கள், வன்முறையை வன்முறையால் தீர்ப்பதைப் பற்றி தயக்கம் காட்ட மாட்டார்கள் என்று கூறிய ஆயர்கள், நியாயப்படுத்தப்படும் வன்முறைகள், இல்லங்களில், மூடியக் கதவுகளுக்குப் பின் மிக அதிக அளவில் ஏற்படுவதையும் தடுக்க இயலாது என்று கூறினர்.

1991ம் ஆண்டு, பாப்புவா நியூ கினி அரசு, மரண தண்டனையை மீண்டும் சட்டமயமாக்கியதுடன், 2013ம் ஆண்டு, இத்தண்டனை எவ்வகையில் நடத்தப்படலாம் என்பது குறித்தும் சட்டத் திட்டங்களை வெளியிட்டுள்ளது என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

மக்களின் நடத்தையில் மாற்றங்களைக் கொணர்வதற்கும், அவர்களை மீண்டும் மனித சமுதாயத்தில் தகுந்த வழியில் இணைப்பதற்குமே தண்டனைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று கூறும் ஆயர்கள், மரண தண்டனை இந்த மாற்றங்களைக் கொணர்வதற்குப் பதில் மனித உயிரை அழிக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.