2015-05-14 16:03:00

பாலஸ்தீன நாட்டிற்கும், வத்திக்கானுக்கும் இடையே தூதரக உறவுகள்


மே,14,2015. பாலஸ்தீன நாட்டிற்கும், வத்திக்கானுக்கும் இடையே தூதரக உறவுகளை மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் குறித்த ஒப்பந்த அறிக்கையொன்று மே 13, இப்புதன் பிற்பகலில் வத்திக்கானில் கையெழுத்திடப்பட்டது.

2012ம் ஆண்டு, ஐ.நா.அவை பாலஸ்தீனத்தை ஒரு நாடாக ஏற்றுக்கொண்டது முதல், திருப்பீடமும் அதை ஒரு நாடாகவே கருதி வந்ததென்று, திருப்பீட செய்தித் தொடர்பாளர் அருள்பணி பெதெரிக்கோ லொம்பார்தி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் மேல்மட்ட அதிகாரிகளின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்களின் ஒப்புதல் கிடைத்தபின், வத்திக்கான் முதல் முறையாக பாலஸ்தீனத்தை ஒரு நாடாகக் கருதி ஒப்பந்தக் கையெழுத்திடும் என்றும் அருள்பணி லொம்பார்தி அவர்கள் கூறினார்.

எருசலேம் நகர், உலக மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்குத் திறந்துவிடப்படும் என்றும், பாலஸ்தீன நாட்டில் வாழும் கிறிஸ்தவர்கள் மதச் சுதந்திரத்துடன் வாழ அந்நாட்டு அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்றும் இவ்வொப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

இப்புதனன்று நடைபெற்ற ஒப்பந்தக் கூட்டத்தில், திருப்பீடத்தின் சார்பில், நாடுகளுடன் உறவுகொள்ளும் திருப்பீடத் துறையின் நேரடிப் பொதுச் செயலர், அருள்பணி அந்துவான் கமில்லெரி அவர்களும், பாலஸ்தீன நாட்டின் சார்பில், அயல்நாட்டு விடயங்களின் துணை அமைச்சர், இரவான் சுலைமான் அவர்களும் பங்கேற்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.