2015-05-14 16:30:00

துன்புறும் கிறிஸ்தவர்களுக்காக இலங்கையில் உண்ணா நோன்பு


மே,14,2015. ஜூன் 7, ஞாயிறன்று கொண்டாடப்படவிருக்கும் இயேசுவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழாவன்று, உலகின் பல நாடுகளில் துன்புறும் கிறிஸ்தவர்களுக்காக ஒரு நாள் உண்ணா நோன்பும், செபமும் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை ஆயர்கள் பேரவை அறிவித்துள்ளது.

தன்னையே உன்னதப் பலியாகத் தந்த இயேசுவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழாவன்று, இரத்தம் சிந்தும் கிறிஸ்துவர்களை எண்ணி செபமும், தவமும் மேற்கொள்வோம் என்று, கூறப்பட்டுள்ள இந்த அறிக்கையில், இலங்கை ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் கையெழுத்திட்டுள்ளார்.

வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் மக்கள் மீது, குறிப்பாக, குழந்தைகள் மீது வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை அறியும்போது, நாம் மிகுந்த வேதனையுறுகிறோம் என்று ஆயர்கள் இவ்வறிக்கையில் கூறியுள்ளனர்.

வன்முறைகளைச் சந்திக்கும் நாடுகளில் உள்ள அரசுகளும், அந்நாடுகளில் உள்ள நல்மனம் கொண்டோரும் இந்த வன்முறைகளை உடனடியாக முடிவுக்குக் கொணரும் முயற்சிகளில் ஈடுபட தாங்கள் விண்ணப்பிப்பதாக, இலங்கை ஆயர்கள் அறிக்கை கூறுகிறது.

மதத்தின் அடிப்படையில் இலங்கை மக்களும் வன்முறைகளைச் சந்தித்துள்ளனர் என்று குறிப்பிடும் ஆயர்கள், அனைவரும் இணைந்து எழுப்பும், செபங்களும், தவ முயற்சிகளும் இறைவனின் அருளைப் பெற்றுத்தரும் என்று கூறியுள்ளனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.