2015-05-14 16:14:00

குழந்தை இயேசு மருத்துவமனை விழாவில் திருப்பீடச் செயலர்


மே,14,2015. மனித உயிரை மதிப்பது மற்றும் மனித உயிர்களுக்கு, குறிப்பாக, குழந்தைகளின் உயிர்களுக்குப் பணியாற்றுவது என்பவை, குழந்தை இயேசு மருத்துவமனையைத் தாங்கி நிற்கும் இரு தூண்கள் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

உரோம் நகரில், குழந்தைகள் நலனுக்கென உருவாக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற குழந்தை இயேசு மருத்துவமனையின் ஆய்வுத் துறை தன் முப்பதாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதையொட்டி, மே 13, இப்புதன் மாலை, உரோம் நகரின் புனித பவுல் பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றிய திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.

குழந்தைகளை மையப்படுத்தி வழங்கப்படும் உயர்ரக மருத்துவ உதவிகள், ஏழைக் குழந்தைகளையும் அடையும்வண்ணம், மருத்துவமனை செயலாற்றவேண்டும் என்ற வேண்டுகோளை கர்தினால் பரோலின் அவர்கள் தன் மறையுரையில் முன்வைத்தார்.

1869ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, திருப்பீடத்தின் நேரடி கண்காணிப்பில் இயங்கிவரும் குழந்தை இயேசு மருத்துவமனை, குழந்தைகள் நலனில் ஐரோப்பாவில் தலைசிறந்த மருத்துவமனையாகக் கருதப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.