2015-05-14 16:24:00

உரையாடல் ஒன்றே, நம்பிக்கையின் சின்னம் - கர்தினால் Tauran


மே,14,2015. நம்மைச் சுற்றி நிகழும் வன்முறைகள், நெருக்கடிகள் அனைத்தின் மத்தியிலும் உரையாடல் முயற்சிகளை மேற்கொள்வது, நம்பிக்கையின் சின்னமாக விளங்கும் என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மே 13, இப்புதன் முதல், 15, இவ்வெள்ளி முடிய சுவிட்சர்லாந்து நாட்டின், St. Maurice என்ற நகரில் நடைபெறும் ஒரு கூட்டத்தில், பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Jean Louis Tauran அவர்கள் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

இஸ்லாமிய உரையாடல் பணியில் ஈடுபட்டிருக்கும் ஐரோப்பிய ஆயர்கள் பேரவைகளின் உறுப்பினர்கள், 'ஐரோப்பாவில் இஸ்லாமியருடன் உரையாடல்: நம்பிக்கையின் ஒளி' என்ற தலைப்பில் மேற்கொண்ட ஒரு கலந்துரையாடலில், கர்தினால் Tauran அவர்கள் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் மேற்கொள்ளும் வன்முறைகளை, பெரும்பான்மையான இஸ்லாமியர் கண்டனம் செய்து வருவது, அம்மதத்தினரோடு நாம் மேற்கொள்ளக்கூடிய உரையாடலுக்கு வழிவகுக்கிறது என்று, கர்தினால் Tauran அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஐரோப்பாவின் பல நாடுகளில் Jihadi அடிப்படைவாதக் குழுக்கள் ஊடுருவி வருவதை செய்திகளாகக் கேட்கும் அதே நேரத்தில், அனைத்து இஸ்லாமியரைக் குறித்தும் தேவையற்ற பயத்தை வளர்த்துக் கொள்வது, உரையாடலுக்குப் பெரும் தடையாக அமைகிறது என்று வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.