2015-05-13 15:26:00

திருத்தந்தையால் நியமனம் பெற்ற ஔரங்காபாத் புதிய ஆயர்


மே,13,2015. இந்தியாவின் ஔரங்காபாத் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி அம்புரோஸ் ரெபெல்லோ அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று நியமனம் செய்தார்.

ஔரங்காபாத் மறைமாவட்டத்தின் ஆயராக இதுவரைப் பணியாற்றிவந்த 77 வயது நிறைந்த ஆயர் எட்வின் கொலாசோ அவர்கள் பணிஓய்வு பெற விரும்பி, சமர்ப்பித்த விண்ணப்பத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக் கொண்டு, அம்மறைமாவட்டத்தின் குருகுல முதல்வராகப் பணியாற்றிய அருள்பணி ரெபெல்லோ அவர்களை, புதிய ஆயராக நியமனம் செய்துள்ளார்.

1949ம் ஆண்டு, பிறந்த அருள்பணி ரெபெல்லோ அவர்கள், நாக்பூர், குருமடத்தில் தன் பயிற்சிகளை முடித்து, 1979ம் ஆண்டு அருள் பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

1979ம் ஆண்டு முதல், 2011ம் ஆண்டு வரை பல்வேறு பங்குத்தளங்களில் பணியாற்றிய அருள்பணி ரெபெல்லோ அவர்கள், 2011ம் ஆண்டு முதல், ஔரங்காபாத் மறைமாவட்டத்தின் சமுதாயப் பணி மையத்தின் இயக்குனராகவும், அம்மறைமாவட்டத்தின் குருகுல முதல்வராகவும் பொறுப்பேற்றார்.

1977ம் ஆண்டு, நாக்பூர் உயர் மறைமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட ஔரங்காபாத் மறைமாவட்டத்தின் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை, 15,750. 34 பங்குகளை உள்ளடக்கிய இம்மறை மாவட்டத்தில், 45 அருள் பணியாளர்களும், 218 இருபால் துறவியரும் பணியாற்றி வருகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.