2015-05-13 15:37:00

கடுகு சிறுத்தாலும்... : கழுதையிடமிருந்தும் கற்றுக்கொள்ளலாம்!


குடும்ப வாழ்க்கை மேற்கொண்ட ஒருவர் ஒரு ஞானியிடம் வந்தார்

தான் ஞானம் பெற விரும்புவதாகவும், ஞானத்தில் சிறந்த ஞானம் எதுவோ, அதை தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

உபதேசம் மூலம் ஞானத்தை இந்த குடும்பஸ்தருக்கு  அறிய வைக்க முடியாது என ஞானி அறிந்தார்

தினமும் வீட்டின் முன்னால் திண்ணையில் காலை முதல் மாலை வரை அமர்ந்திருக்கும்படியும் அந்த வழியாக சலவை தொழிலாளி கழுதையின் மீது பொதிகளை ஏற்றி வருவார் என்றும், காலையில் ஏற்றி வரும்போதும்  மாலையில் திரும்பும்போதும் அதனை கவனிக்கும்படியும் கூறினார் ஞானி.

மறுதினம் பொழுது புலர்ந்ததும் குடும்பஸ்தர் திண்ணையில் அமர்ந்தார். சலவை தொழிலாளி அழுக்கு  பொதிகளை கழுதை மேல் ஏற்றி வந்தார். மீண்டும் மாலையில் சலவை செய்த துணிகளையும் ஏற்றிச் சென்றார்.

மறுநாள் ஞானியிடம் சென்ற குடும்பஸ்தர், நீங்கள் சொன்னது போல் காலையிலும் மாலையிலும் கழுதைகள் சென்றதையும் திரும்பியதையும் கவனித்தேன், ஆனால் அதில் ஞானம் தொடர்பான செய்தி இருப்பதுபோல் தெரியவில்லையே எனக் கூறினார்.

“அன்பனே!.... காலையில் கழுதைகள் அழுக்கு துணிகளை சுமந்துச் சென்றன. அப்போது ‘அழுக்கு துணிகளைச் சுமக்கிறோம்’ என்ற வருத்தம் இல்லை; அதே போல், மாலையில்  ‘சலவை செய்த துணிகளைச் சுமக்கிறோம்’ என்ற மகிழ்ச்சியும் இல்லை. துன்பம் வரும்போது அதிக துன்பமில்லாமலும், இன்பம்  வரும்போது அதிக மகிழ்ச்சி இல்லாமலும், இன்ப துன்பம் இரண்டையும் நடுநிலையான  மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். என்ற செய்தியே அந்த கழுதைகள் மூலம் தரப்படும் ஞானம்” என்றார் ஞானி. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.