2015-05-13 15:54:00

இராணுவத்தில் அருள்பணியாற்றுவோருக்கு திருத்தந்தையின் செய்தி


மே,13,2015. அமைதியை உறுதி செய்தல், வறியோரை, வலுவற்றோரைக் காத்தல், போன்ற நன்மை விளைவிக்கும் காரணங்களுக்காக இராணுவம் பணியாற்றும்போது, அது உன்னத பணியாக மாறுகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இராணுவத்தில் அருள்பணியாற்றுவோர் இணைந்து, "அமைதி நோக்கி, இராணுவ அருள் பணியாளர்களின் அடையாளமும், பணியும்" என்ற தலைப்பில், மே 11, இத்திங்கள் முதல், மே 15, இவ்வெள்ளி முடிய பாரிஸ் மாநகரில், நடத்திவரும் நான்காவது மாநாட்டிற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

திருத்தந்தை வழங்கிய இச்செய்தியை, இந்த மாநாட்டைத் தலைமையேற்று நடத்தும், திருப்பீட ஆயர்கள் பேராயத்தின் தலைவர் கர்தினால் Marc Ouellet அவர்களுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.

ஆபத்து நிறைந்த சூழலில் இரவும் பகலும் பணியாற்றிவரும் வீரர்களுக்கு, மன அமைதியையும், நம்பிக்கையையும் தரும் முக்கியப் பணியில், இராணுவ அருள் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று திருத்தந்தை தன் செய்தியில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய உலகில் அமைதியைக் கொணர்வதற்கு திருஅவை மேற்கொண்டு வரும் முயற்சிகள் பலவற்றின் முக்கியதோர் அடையாளமாக இராணுவ அருள் பணியாளர்களின் பணி அமைத்துள்ளது என்று இம்மாநாட்டின் துவக்க உரையை வழங்கிய கர்தினால் Ouelett அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.