2015-05-12 15:44:00

விவிலியத் தேடல் – திருமண விருந்து உவமை – பகுதி - 2


இஸ்ரயேல் மக்கள் மத்தியில் விருந்துக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அவர்களைப் பொருத்தவரை, பந்தி அமர்ந்து விருந்துண்பது என்பது, வெறும் உணவு மட்டுமல்ல, தலை சிறந்த ஒரு கனவு. விடுதலையை, பாதுகாப்பை, குடும்ப உணர்வை, குறிக்கும் ஓரு கனவு என்று சென்றவாரத் தேடலின் இறுதியில் குறிப்பிட்டோம். விருந்துண்பதைப் போலவே, விருந்து தருவதும், இஸ்ரயேல் மக்களின் உன்னதக் கனவாக விளங்கியது.

விருந்து தரும் முதல் நிகழ்வு, தொடக்கநூல் 18ம் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபிரகாம் மூன்று மனிதர்களுக்கு அளித்த விருந்தைப்பற்றி அங்கு வாசிக்கிறோம். பகலில், வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில் (தொ.நூ. 18: 1) என்று இப்பிரிவின் முதல் வரிகள் சொல்கின்றன.

வெப்பம் மிகுதியாகும்போது, மனமும், உடலும் சோர்ந்துவிடும். ஒருவேளை, ஆபிரகாம், அப்படி ஒரு சோர்வுடன் தன் கூடார வாயிலில் அமர்ந்திருந்தார். அந்நேரத்தில் மூன்று பேர் அவர்முன் நின்றனர். முன்பின் அறிமுகம் இல்லாத மூவர்... வழி தவறி வந்திருக்கலாம், வழி கேட்க வந்திருக்கலாம். இப்படி, நேரம் காலம் தெரியாமல் வருபவர்களிடம் முகம் கொடுத்துப் பேசுவதே அபூர்வம். “யார் நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?” என்று சீக்கிரம் அவர்களை அனுப்பி வைப்பதுதான் வழக்கம். அதற்குப் பதில், ஆபிரகாம் செய்தது வியப்பான செயல். அங்கு நடந்ததைத் தொடக்க நூலிலிருந்து கேட்போம்:

தொடக்க நூல் 18 : 1-5

பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்: மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூடார வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி, “என் தலைவரே... நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக! இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம் மரத்தடியில் இளைப்பாறுங்கள். கொஞ்சம் உணவு கொண்டுவருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள்...” என்றார்.

ஆபிரகாம் காலத்துக் கதை இது. நம் காலத்து கதை வேறு. தமிழ்த் திரையுலகில் நகைச்சுவையில் மிகப் புகழ்பெற்ற ஒருவர் நடித்த ஒரு காட்சி இது. அவர் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வருவார். அவரது கையிலும், கழுத்திலும் விலையுயர்ந்த நகைகள் அணிந்திருப்பார். கையில் வைத்திருக்கும் ஒரு மஞ்சள் பையில் பணமும் வைத்திருப்பார். அவரது அப்பாவித்தனத்தைப் பயன்படுத்தி, யாரோ ஒருவர் அவரது பால்ய நண்பர் என்று தன்னையே அறிமுகம் செய்துகொண்டு, அவரை அழைத்துச் சென்று, ஓர் அறையில் தங்கவைத்து, அவர் வேண்டாம் வேண்டாம் என்று மறுத்தாலும், வலுக்கட்டாயமாக விருந்து கொடுப்பார். மதுவையும், உணவையும் தேவைக்கு அதிகமாகக் கொடுத்து, அவரைத் தூங்க வைப்பார். மறுநாள் காலையில் அந்த அப்பாவி மனிதர் கண் விழிக்கும்போது, நடுத்தெருவில் படுத்திருப்பார். அவரது உடைமைகள், அவர் படுத்திருந்த கட்டில்... ஏன், அவர் படுத்திருந்த அந்த அறை கூட காணாமல் போயிருக்கும். இப்படி அந்தக் காட்சி அமைந்திருந்தது. முன் பின் தெரியாதவர்களை நம்பினால், இவ்விதம் நடுத்தெருவுக்கு வரவேண்டியிருக்கும் என்பது, இன்று சொல்லப்படும் கதை.

ஆபிரகாம் வாழ்ந்த காலத்தையும், நாம் வாழும் காலத்தையும் ஒப்பிடுவது தவறு என்பது எனக்குத் தெரிகிறது. ஆனாலும், அன்று, அங்கு நடந்தது இன்றைய நம் சூழலுக்குத் தேவைப்படும் ஒரு சில பாடங்களையாவது சொல்லித் தரும் என்பதை நாம் மறக்கக் கூடாது. மறுக்கக் கூடாது. ஆபிரகாம் விருந்தினர்களை வரவேற்ற நிகழ்விலிருந்து பாடங்களைப் பயில முயல்வோம். முதலில்... முன்பின் தெரியாதவர்களை வீட்டுக்குள் வரவழைத்து, விருந்து கொடுப்பதைப் பற்றிச் சிந்திக்கலாம்.

முன்பின் தெரியாதவர்களை வீட்டுக்குள் அனுமதிப்பதே பெரும் ஆபத்து. அதற்கு மேல் அவர்களுக்கு விருந்தா? பெரு நகரங்களில் வாழ்பவர்களுக்கு வீட்டின் அழைப்பு மணி அடித்தாலே, முதலில் மனதில் ஐயமும், பயமும் கலந்த எண்ணங்களே அதிகம் எழும். கதவைத் திறப்பதற்கு முன், ஒரு துளைவழியே வெளியில் இருப்பவரைப் பார்ப்போம். கொஞ்சம் அறிமுகமானவர் போல், அல்லது, பார்க்கக் கொஞ்சம் அப்பாவி போல் தெரிந்தால், சங்கிலியால் பிணைக்கப்பட்ட நம் வீட்டுக் கதவை, அந்த சங்கிலி அனுமதிக்கும் அளவுக்குத் திறப்போம். வெளியில் இருப்பவர் வீட்டுக்குள் வரலாமா வேண்டாமா என்ற தீர்மானத்தை அந்தச் சிறு இடைவெளியில் எடுப்போம். இப்படி ஒருவரை வீட்டுக்குள் அனுமதிப்பதற்கே இத்தனை தயக்கம் இருக்கும் நம் சூழ்நிலையில், விருந்தோம்பல் என்பது கற்பனையாய், கனவாய் மாறி வருவது உண்மையிலேயே பெரும் இழப்புதான்.

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை, வழியோடு சென்றவர்களை, வலியச்சென்று அழைத்து வந்து விருந்து படைக்கிறார் ஆபிரகாம். அதுவும், வீட்டில் எதுவும் தயாராக இல்லாமல் இருக்கும்போது, இப்படிப்பட்ட ஒரு விருந்து. விருந்தினர்கள் வீட்டுக்கு வந்த பிறகுதான் ஏற்பாடுகளே நடக்கின்றன. ஓர் எளிய, நடுத்தர குடும்பத்தில் நடக்கும் ஒரு காட்சி நம் மனக்கண் முன் விரிகிறது.

தனக்கோ, தன் குடும்பத்திற்கோ நல்ல உணவு இல்லாதபோதும், விருந்தினர் என்று வரும்போது, நல்ல விருந்து கொடுப்பவர்களை நாம் சந்தித்திருக்கிறோம். தாங்கள் வசதி படைத்தவர்கள் என்பதைப் பறைசாற்றச் செய்யப்படும் முயற்சி அல்ல இது. தங்கள் அன்பை, பாசத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதே இந்த முயற்சி. நம் வீடுகளில் அடிக்கடி இப்படி நடந்திருக்க வாய்ப்புண்டு. முன்னறிவிப்பு ஏதுமின்றி வந்துவிடும் விருந்தினருக்கு, தன் வீட்டில் ஒன்றுமில்லாத நிலையிலும், தன் மகனை அடுத்த வீட்டுக்கு அனுப்பி, அல்லது வீட்டுக்கு எதிரே உள்ள கடையில் கடனைச் சொல்லி ஒரு பழரசமோ, காப்பியோ வாங்கிவந்து கொடுக்கும் எத்தனை பேரை நாம் பார்த்திருக்கிறோம்? அல்லது, எத்தனை முறை இப்படி நாம் நடந்து கொண்டிருக்கிறோம்?

நான் அருள்பணியாளரான பிறகு, எத்தனையோ இல்லங்களுக்கு அழைக்கப்பட்டிருக்கிறேன். நடுத்தர வசதி படைத்தவர்கள், அல்லது ஏழ்மையானவர்கள் வீடுகளில் சாப்பிடும்போது, அந்த உணவுக்குப் பின்னணியில் அவர்கள் எத்தனை தியாகங்களை மேற்கொண்டிருப்பர் என்று நினைத்து கண் கலங்கியதுண்டு. விருந்தோம்பலுக்கு இலக்கணம் இந்தக் குடும்பங்கள். என்னிடம் இருந்து ஒன்றும் எதிர்பார்க்காமல், நான் ஓர் அருள்பணியாளர் என்ற ஒரே காரணத்திற்காக வழங்கப்படும் அன்பு விருந்து அது.

அன்பைப் பறைசாற்றும் இத்தகைய விருந்துகளைப்பற்றிப் பேசும்போது, செல்வத்தைப் பறைசாற்றுவதற்கென்று விருந்து படைக்கும் செல்வந்தர்களைப் பற்றி இங்கு சிந்திக்காமல் இருக்கமுடியவில்லை. உலகிலேயே மிக அதிகச் செலவுடன் நடத்தப்பட்ட திருமணங்கள் என்ற பட்டியலை இணையதளத்தில் தேடிப்பார்த்தால், வேதனையான ஓர் ஆச்சரியம், நம் மனதில் வேலைப் பாய்ச்சும்.

2004ம் ஆண்டு உலகின் மிகப்பெரும்... மிக, மிக, மிகப் பெரும் செல்வந்தர்களில் ஒருவர் தன் மகளுக்கு நடத்திய திருமண விருந்து, கின்னஸ் உலகச்சாதனை என்று பேசக்கூடிய அளவுக்கு, செலவு செய்யப்பட்ட ஒரு விருந்து. அந்த விருந்துக்கு ஆன செலவு 60 முதல் 70 மில்லியன் டாலர், அதாவது ஏறத்தாழ 300 முதல் 350 கோடி ரூபாய். மிகப் பெரும் புள்ளிகளான 1000 பேர் மட்டுமே கலந்துகொண்ட அவ்விருந்துக்கு ஆனச் செலவில் 30 கோடி ஏழை இந்தியர்கள் ஒரு நாள் முழுவதும் வயிறார சாப்பிட்டிருக்கலாம். அந்த விருந்தில் வீணாக்கப்பட்ட உணவை மட்டும் கொண்டு, குறைந்தது 10 கோடி ஏழைகள் வயிற்றைக் கழுவியிருக்கலாம். ஏன் இந்த விருந்தையும் இந்தியாவையும் முடிச்சு போடவேண்டும் என்று குழப்பமா? இந்த விருந்தைக் கொடுத்த செல்வந்தர், ஓர் இந்தியர். அதனால்தான்.

பொறாமையில் பொருமுகிறேன். உண்மைதான். ஆனால், இப்படிப்பட்ட விருந்துகள் இந்தியர்களால் நடத்தப்படுவது, வேதனை, பாவம் என்பதையாவதுச் சொல்லித்தானே ஆகவேண்டும்.

விருந்தோம்பல் என்ற வார்த்தையைக் கேட்டதும், கட்டாயம் திருவள்ளுவரும், திருக்குறளும் நினைவுக்கு வந்திருக்கும். விருந்தோம்பலின் மிக உயர்ந்த பண்புகளை, பத்துக் குறள்களில், தெளிவாகக் கூறுகிறார் திருவள்ளுவர். தொடக்க நூலில், ஆபிரகாம் அளித்த விருந்துக்கு விளக்கம் தருவதுபோல், இந்தப் பத்துக் குறள்களில் ஒன்று அமைந்துள்ளது:

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத்தவர்க்கு

அதாவது, நாள் முழுவதும் விருந்தினரை உபசரித்து வழியனுப்பி, அடுத்த விருந்தினரை எதிர்கொண்டு வாழ்பவர், விண்ணவர் மத்தியில் விருந்தினர் ஆவார் என்று வள்ளுவர் சொன்னார். வானவரின் மத்தியில் விருந்தினர் ஆவது போல், வானவர் என்று தெரியாமலேயே, அவர்களை அழைத்து, விருந்து படைத்த ஆபிரகாமைக் குறித்து விவிலியத்தின் மற்றொரு பகுதியில் காணப்படும் வரிகள் இவை.

எபிரேயருக்கு எழுதிய திருமுகம் 13: 1-2

சகோதர அன்பில் நிலைத்திருங்கள். அன்னியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள். இவ்வாறு விருந்தோம்பியதால் சிலர் தாங்கள் அறியாமலே வான தூதர்களை மகிழ்ச்சிப்படுத்தியதுண்டு.

ஆபிரகாம் கதை எப்படி நடைமுறைக்கு ஒவ்வாத, கற்பனையாய், கனவாய்த் தெரிகிறதோ, அதேபோல், திருவள்ளுவரின் கூற்றுகளும் எட்டமுடியாத உயரத்தில் உள்ள உபதேசங்களாய்த் தெரியலாம். எட்டமுடியாத உயரத்தில் இருப்பதால், ‘அந்தப் பழம் புளிக்கும்’ என்று ஒதுக்காமல், வாழ்வில் ஓரளவாகிலும் கடைபிடித்தால்,... இந்த உலகம் விண்ணகமாவது உறுதி.

வள்ளுவர் கூறிய அந்த மேலான எண்ணங்களில் மேலும் இரண்டை மட்டும் நம் சிந்தனைகளின் நிறைவாய், இன்று, நினைவுக்குக் கொணர்வோம்.

உலகத்தில் வாழ்வதன் முக்கிய நோக்கமே, விருந்தோம்பல் என்கிறார் வள்ளுவர்:

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.

சாவைத் தடுக்கும் மருந்தான அமிர்தமே நமக்குக் கிடைத்தாலும், அதையும் விருந்தினரோடு பகிர்வதே அழகு என்கிறார் வள்ளுவர்.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும்

வேண்டற்பாற் றன்று.

விருந்து, விருந்தோம்பல் என்ற அழகிய வாழ்வியல் அம்சங்களை நமக்கு மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தவும், தேவையானால், மீண்டும் ஒருமுறை நமக்குப் பாடங்கள் சொல்லித்தரவும், இறைமகன் இயேசு, மத்தேயு நற்செய்தியில் கூறியுள்ள 'திருமண விருந்து உவமை' நமக்கு உதவும் என்ற நம்பிக்கையுடன், நம் தேடலைத் தொடர்வோம்....

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.