2015-05-12 15:50:00

நேபாளத்திற்கென CAFOD அமைப்பு 10 இலட்சம் பவுண்டு திரட்டியது


மே,12,2015. நேபாளத்தில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென, இங்கிலாந்தின் பள்ளிகள், பங்குதளங்கள் மற்றும் தனியார் வழியே, இதுவரை, 10 இலட்சம் பவுண்டுகளை திரட்டியுள்ளது CAFOD எனும் கத்தோலிக்க உதவி அமைப்பு.

நேபாளத்தின் அழிவுகள் குறித்து பெரும் அதிர்ச்சியடைந்திருந்த இவ்வமைப்பினர், இங்கிலாந்து மக்கள் தாங்களே முன்வந்து உதவிகளை வழங்கியபோது மகிழ்ந்ததாகவும், உடனடியாக நேபாள மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தங்களால் முடிந்தது எனவும் கூறினார் CAFODன் மனிதாபிமான துறைத்தலைவர்  Matthew Carter.

பள்ளிகள், பங்குதளங்கள் வழியே பெருமளவில் நன்கொடைகள் வழங்கப்பட்டுவரும் வேளையில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தனியாரும் நிதியுதவிகளை தங்கள் மூலம் வழங்கியுள்ளதாக CAFOD அமைப்பு தெரிவித்தது.

நேபாள மக்களுக்கென 10 இலட்சம் பவுண்டுகளை இதுவரை திரட்டியுள்ளவேளை, CAFOD உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள 13 கிறிஸ்தவ அமைப்புகளின் பேரிடர் துடைப்பு அமைப்பும் 4 கோடியே 70 இலட்சம் பவுண்டுகளைத் திரட்டியுள்ளது.

மக்களின் தாராளமனதுடன் திரட்டப்பட்டுள்ள இந்த நிதியானது, நேபாள கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு மூலம் இடர்துடைப்புப் பணிகளுக்குச் செலவிடப்படும்.

இதற்கிடையே, இச்செவ்வாய்க்கிழமை காலையில் 7.3 ரிக்டர் அளவைக் கொண்ட பெரும் நிலநடுக்கம் ஒன்று மீண்டும் நேபாளத்தில் இடம்பெற்றுள்ளது. 

ஆதாரம் : ICN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.