2015-05-12 16:13:00

எபோலாவிலிருந்து முற்றிலும் பாதுகாப்பு பெற்றுள்ளது லிபேரியா


மே,12,2015. உயிர் கொல்லி நோயான எபோலாவினால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த ஆப்ரிக்காவின் லிபேரியா நாடு, தற்போது அந்நோயிலிருந்து முற்றிலும் பாதுகாப்பு பெற்றுள்ளது என்று ஐ.நா.வின் நலவாழ்வு நிறுவனம் WHO அறிவித்துள்ளது.

1976ம் ஆண்டு முதல் லிபேரியா நாட்டில் காணப்பட்ட எபோலா நோய்க் கிருமியின் தாக்கம், கடந்த ஆண்டு, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் உச்ச நிலையை அடைந்ததால், லிபேரியா நாட்டில் மட்டும், 10,564 பேர் இந்த நோயினால் தாக்கப்பட்டனர் என்றும், அவர்களில் 4,716 பேர் மரணமடைந்தனர் என்றும் WHO அறிக்கை கூறுகிறது.

இவ்வாண்டு, மார்ச் 20ம் தேதி, இந்த நோயினால் இறுதியாகப் பாதிக்கப்பட்டவர், மார்ச் 27ம் தேதி இறந்ததையடுத்து, அவர் மார்ச் 28ம் தேதி புதைக்கப்பட்டார்.

எபோலா நோயினால் இறுதியாகப் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்பட்டவர், அடக்கம் செய்யப்பட்டபின், கடந்த 42 நாட்கள் வேறு யாரும் இந்த நோயினால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்த பிறகு, WHO தன்னார்வத் தொண்டர்கள், எபோலா நோய் லிபேரியாவிலிருந்து முற்றிலும் நீங்கியுள்ளது என்று அறிவித்தனர்.

இந்த நோய் ஒருவரிடமிருந்து அடுத்தவருக்குப் பரவும் கால இடைவெளி 42 நாட்கள் என்று தீர்மானிக்கப்பட்டதால், இந்த 42 நாட்களில், WHO தன்னார்வத் தொண்டர்கள், ஒவ்வொரு நாளும் 300க்கும் அதிகமான பேரின் இரத்தத்தை ஆய்வு செய்தபின்னர், இந்த முடிவை அறிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் இந்த நோயின் கொடுமை மிக அதிகமாக இருந்த வேளையில், லிபேரியாவும், அதைச் சுற்றியுள்ள கினி மற்றும் சியெரா லியோனே நாடுகள் உச்சநிலை கண்காணிப்பில் வைக்கப்பட்டன.

எபோலா நோயைக் கட்டுப்படுத்த, இந்த மூன்று நாடுகளும், மேற்கொண்ட முயற்சிகளுக்கு, ஐ.நா.வின் நலவாழ்வு நிறுவனம் WHO, தலைசிறந்த பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.