2015-05-11 16:43:00

வாரம் ஓர் அலசல் – துன்பங்களில் கடவுளைக் காண..


மே.11,2015. இஸ்பெயின் நாட்டவரான Kayla Mueller, இளம் மனித உரிமை ஆர்வலர். சிரியா நாட்டுப் புலம் பெயர்ந்த மக்களுக்கென துருக்கி எல்லையில் அமைக்கப்பட்டிருந்த, வாழ்வுக்கு ஆதரவு என்ற பன்னாட்டு உதவி நிறுவனத்தில் தொண்டுபுரிந்து வந்தவர். 2013ம் ஆண்டு ஆகஸ்டில் ஒருநாள் இவர், சிரியாவின் அலெப்போ நகரில் எல்லைகளற்ற மருத்துவர் தன்னார்வ அமைப்பு நடத்திய மருத்துவமனைக்கு உதவி செய்வதற்காகச் சென்றிருந்தார். அன்று அந்த மருத்துவமனையில் சேவை செய்துவிட்டு Kaylaவும், அவரோடு சேர்ந்து தன்னார்வத் தொண்டாற்றிய சிலரும் துருக்கி செல்வதற்காக பேருந்தில் ஏறியபோது ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமிய அரசின் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். இவ்வாண்டு பிப்ரவரி 6ம் தேதி ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமிய அரசு, Kayla என்ற பெயரில் ஓர் உடைந்த கட்டிட புகைப்படத்தை வெளியிட்டது. சிரியாவின் ராக்காவில் ஜோர்டன் நாட்டு விமானத் தாக்குதலில் Kayla கொல்லப்பட்டார் என்றும் அதில் அவ்வரசு கூறியிருந்தது. அதோடு Kaylaவின் மூன்று புகைப்படங்களையும் அவரின் குடும்பத்துக்கு மின்னஞ்சலில் அனுப்பி அவரின் இறப்பை உறுதிசெய்திருந்தது. Kaylaவின் உடம்பு, அவரின் எரிந்த முகம், அவரின் தலையும் மார்பும் கறுப்பு முக்காட்டால் மூடபட்ட நிலை என மூன்று புகைப்படங்கள். கடந்த பிப்ரவரி 10ம் தேதி Kaylaவின் குடும்பம் அவரின் இறப்பை உறுதி செய்தது. Kayla கொல்லப்பட்டபோது அவருக்கு வயது 26.

Kaylaவின் தந்தை Carl, தாய் Marsha Mueller ஆகிய இருவரும், “நாங்கள் நசரேன்கள்” என்ற தலைப்பில் அண்மையில் மத்ரித்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் Kayla பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். Marsha Mueller அவர்கள்...

சிரியாவில் கொல்லப்பட்ட தங்களின் மகள் Kayla எப்போதும் பிறரின் துன்பங்களைக் கண்டு தானும் துன்புறுவார், துன்பத்தைப் பார்த்த போதெல்லாம் அவர் இதயம் வெடித்துவிடுவதுபோல் உணருவார். Kayla, தனது இளவயதிலிருந்தே இளையோர் அமைப்பு உட்பட பல தன்னார்வ நிறுவனங்களில் தன்னை ஈடுபடுத்தி வாழ்ந்தார். நல்ல பேச்சுத் திறமை மிக்க பெண். ஆதலால் பன்னாட்டுக் குழுக்களுடன் எளிதில் பழகி விடுவார். Kayla, துன்புறுவோர் மீது கருணை காட்டுபவர். சிலர் திருஅவையில் இறைவனைக் காண்பர், சிலர் இயற்கையில் இறைவனைக் காண்பர், சிலர் அன்பில் இறைவனைக் காண்பர், ஆனால் Kayla துன்பங்களில் இறைவனைக் கண்டார். என் மகளைப்போல நானும் துன்பங்களில் இறைவனைக் காண முயற்சிக்கிறேன்..

என்று கூறியுள்ளார். 2009ம் ஆண்டு டிசம்பரில் அரசியல் அறிவியலில் கல்லூரி படிப்பை முடித்த Kayla, இரு மாதங்களுக்குப் பின், இந்தியா சென்று ஒரு கருணை இல்லத்தில் தொண்டாற்றியுள்ளார். கடும் வெப்பம் தாங்க முடியாமல், இந்தியாவின் வடக்குப் பகுதிக்குச் சென்று திபெத்திய அகதிகளுடன் பணியாற்றி அவர்களுக்கு ஆங்கிலமும் கற்றுக் கொடுத்தார். பின்னர் இஸ்ரேல், பாலஸ்தீனம் சென்று தன்னார்வப் பணியாற்றினார். ஆப்ரிக்காவில் மறைப்பணியாற்றச் செல்லும் ஆவலில் பிரான்ஸ் சென்று ப்ரெஞ்ச் மொழியும் கற்றுள்ளார் Kayla. நான் உயிரோடு வாழும்வரை துன்பங்களை அனுமதிக்க மாட்டேன் என்று இவர் அடிக்கடி கூறுவாராம். மொத்தத்தில் சிரியாவில் கொல்லப்பட்ட 26 வயது இளம்பெண் Kayla, பிறர் துன்பங்களில் இறைவனைக் கண்டவர்.

கடந்த ஞாயிறன்று சிரியாவின் அலெப்போ மாவட்டத்தில் Saif al-Dawla பாலர் பள்ளியில் கொத்து வெடிகுண்டு வீசப்பட்டதில் சிறார், ஆசிரியர் உட்பட குறைந்தது பத்துப் பேர் கொல்லப்பட்டனர். சிறாரின் அலறல் சப்தம் கேட்டு மக்கள் விரைந்துவந்து பலரை  மீட்டுள்ளனர். இந்த வன்முறை குறித்து சமூக வலைத்தளத்தில் கடந்த செவ்வாயன்று பதிவு செய்துள்ள ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அனைத்துலக மனித உரிமைகள் நிறுவனம், இந்நகரிலுள்ள குடிமக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கொடுந்துன்பங்களை அனுபவிக்கின்றனர். அரசுப் படைகளும், புரட்சிக் குழுக்களும் தினமும் போர்க்காலக் குற்றங்களைச் செய்து வருகின்றனர் என்று குற்றம் சாட்டியது. 2014ம் ஆண்டு சனவரி முதல் 2015ம் ஆண்டு மார்ச் வரை அலெப்போவில் கொத்து வெடிகுண்டுகளால் 3,124 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Noelin Rupa Fernando என்ற இலங்கைப் பெண்ணுக்கு வயது 48. இரு பிள்ளைகளுக்குத் தாயான இவர், ASIPA என்ற ஆசிய ஒருங்கிணைப்பு மேய்ப்புப்பணி கழகத்திற்கு உள்ளூர் தலைவர். Kochchikade மாநிலத்தின் Naninamadama வியாகுல அன்னை பங்கைச் சேர்ந்த இவர், பங்குத்தளத்திலுள்ள நோயாளிகளையும் வயதானவர்களையும் சந்திப்பது, செபக் கூட்டங்களை நடத்துவது போன்ற பணிகளைச் செய்து வந்தார். இந்தப் பணிகளைச் செய்வதற்கு இவரது கணவரும் ஆதரவளித்தார். எனவே இப்பணியில் இவர் ஆர்வமுடன் ஈடுபட்டிருந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஒருநாள் Noelin திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரது மூளையின் வலது பக்கத்தில் புற்றுநோய் முற்றிய நிலையில் பரவியுள்ளது என்று மருத்துவப் பரிசோதனையின் முடிவுகள் கூறின. இதைக் கேட்டு நொய்லினும் அவரது குடும்பம் முழுவதும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அதற்குப் பின் நடந்ததை நொய்லினே சொல்கிறார்...

எனக்குத் தாங்க முடியாத வலி. எனது குடும்பம் சோகத்தில் மூழ்கியது. இந்தச் சூழ்நிலையை நான் எப்படி எதிர்கொள்ளப் போகிறேன் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. நான் பிறருக்காக வாழ்ந்தேனே, எனக்கு ஏன் இந்தக் கடும் நோய்? என்று கடவுளிடம் முறையிட்டேன். ஆயினும் ஒரு புதுமைக்காக இயேசுவின் அன்பைச் சார்ந்திருப்பதே ஒரே தீர்வு என்ற முடிவுக்கு வந்தேன். கடவுளே, எனது வேதனையை எடுத்துக்கொண்டு எனக்குக் குணமளியும் என்று மன்றாடினேன். ஆழ்ந்த விசுவாசத்துடன் செபிக்கத் தொடங்கினேன். நாள்கள் செல்லச் செல்ல எனக்காகப் பலர் செபித்தனர். எனது விசுவாசமும் நாளுக்குநாள் உறுதியடைந்தது. ஒவ்வொரு நாள் இரவும் எனது குடும்பமும் ஒன்றிணைந்து செபிக்கத் தொடங்கியது. அதேநேரம், Maharagama மருத்துவமனையில் ரேடியோ சிகிச்சை பெற்றேன். எனது மகள் என்னோடு இருந்து உதவினார். இந்தச் சிகிச்சை நாள்களில் என்னோடு இருந்தவர்களில் இயேசுவின் அன்பை அதிகமாக அனுபவித்தேன். இதற்குமுன் இயேசுவின் அன்பை இவ்வளவு தூரம் அனுபவித்ததில்லை. இந்நோய் மிகவும் வேதனையாக இருந்தாலும், அது, எனக்கு ஏதோ ஒரு நன்மையும் செய்துள்ளது. கடந்த வாரம் புற்றுநோய் நிபுணர் மருத்துவர் Sunil Perera அவர்களிடம் பரிசோதனைக்காகச் சென்றேன். எனது பழைய மருத்துவக் குறிப்புக்களைப் பார்த்த பின், இப்போது புற்றுநோய்ப் பாதிப்பு ஏதும் இல்லை என்று சொன்னார். இந்நோய் எனக்கும், எனது குடும்பத்துக்கும், என் நண்பர்கள் மற்றும் எனது கிராமத்தினருக்கு நல்ல ஒரு பாடத்தைக் கற்றுத் தந்துள்ளது. நான் குணமடைந்துவிட்டேன் என்று மகிழ்ந்தாலும், நான் கடவுளின் அன்பை அனுபவித்துள்ளேன் என்று உணர முடிகின்றது. எனக்காக உதவி செய்தவர்களுக்கு நன்றி சொல்கிறேன். அதேநேரம் கடவுளின் ஆசிர்வாதம் அவர்களை நிறைக்கட்டும் என செபிக்கிறேன்,. இயேசுவின் அன்பு என்னைக் குணப்படுத்தியது. நான் துன்பங்களில், துன்புறுவோரில் இறைவனைக் கண்டேன்...

இவ்வாறு தனது மூளை புற்றுநோய்ப் பாதிப்புப் பற்றி ஆசியச் செய்தி நிறுவனத்திடம்  இவ்வாரத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் Noelin.

அன்று கொல்கத்தாவில் சாலையோரத்தில் செத்துக்கொண்டிருந்த ஒரு வயதானவரின் உடலை எறும்புகளும் எலிகளும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அவற்றை விரட்டவோ, தன் உடலை அசைக்கவோகூட முடியாமல் அவ்வயதானவர் கிடந்தார். அவர் உடலைப் பல்வேறு இடங்களில் புழு பூச்சிகள் அரித்திருந்தன. அவ்வழியே சென்ற பலருக்கு அவர் வேடிக்கைப் பொருளாக இருந்தாரேயொழிய யாரும் அவருக்கு உதவவில்லை. ஆனால் அவ்வயதானவருக்கு அவ்வழியே வந்த அன்னை தெரேசாவின் இரக்கம் கிட்டியது. கருணை பெருக்கெடுத்தோட, முடிந்தவரை எறும்புகளையும் எலிகளையும் துரத்திவிட்டு அவரை அப்படியே தூக்கிக் கொண்டு நேராக அரசு மருத்துவமனைக்குச் சென்றார் அன்னை தெரேசா. அவருக்கு மருத்துவம் செய்யவேண்டும் என்று கூறினார். ஆனால் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். நீங்கள் சிகிச்சை செய்யும்வரை நான் இங்கிருந்து நகரப்போவதில்லை என்று மருத்துவமனை வாசலிலேயே முதியவரை மடியில் கிடத்திக்கொண்டு உட்கார்ந்துவிட்டார் அன்னை தெரேசா. என்னடா இது வம்பாப் போச்சே என்று மருத்துவமனையில் வயதான அவருக்கு சிகிச்சை அளித்தார்கள். சிகிச்சைகள் அளித்தும் காப்பாற்றப்படும் நிலையைக் கடந்திருந்த அவர் இறந்துபோனார். ஆனால் தன்மீதும் அன்பு காட்ட ஓர் உயிர் இருக்கிறது என்ற உண்மையை இறப்பதற்குமுன் உணர்ந்து கொண்டவராக அந்த வயதானவர் இறந்தார்.

குறுகிய மனம் கொண்ட சிலர் அன்னை தெரேசாவைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் குறை கூறினாலும் அகண்ட இந்த உலகம் அவரைச் சரியாகவே புரிந்துகொண்டுள்ளது. அருளாளர் அன்னை தெரேசா இப்படிப் பணி செய்யக் காரணம், அவர் துன்புறுவோரில், ஏழைகளில், ஒதுக்கப்பட்டவரில், தொழுநோயாளிகளில் இறைவனைக் கண்டார்.

அன்பு நேயர்களே, நம்மில் பலரின் குடும்பங்களிலேயே, அன்பில்லா நோயால் பிள்ளைகளும், வயதானவர்களும் தாக்கப்பட்டுள்ளனர். அன்னை தெரேசா கூறியது போல, உலகிலேயே மிக மோசமான நோய், தொழுநோயோ, எலும்புருக்கி நோயோ அல்ல. ஆனால் நாம் யாராலுமே அன்புகூரப்படவில்லை, யாருமே நம்மை விரும்பவில்லை என்ற உணர்வுதான் மிக மோசமான நோய். எனவே நம் சேவையை நம் குடும்பத்திலிருந்தே தொடங்குவோம்.

துன்புறும் மனிதரில் இறைவனைக் கண்டு அவர்களுக்கு அன்பாக, ஆதரவாக இருப்போம்.  அப்பா, ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும், தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் என்று செபிப்போம். இதுநாள் வரையில் நாங்கள் இந்நாள்வரை நான் எந்த உயிர்களுக்கும் துன்பம் தந்தது இல்லை, இனிமேலும் யாருக்கும் துன்பம் தரமாட்டேன் என்ற உணர்வில் வாழ்வோம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.