2015-05-11 16:34:00

நேபாள மக்களுக்கு நிதி உதவிகள் செய்ய கர்தினால் விண்ணப்பம்


மே,11,2015. இந்தியாவில் வாழும் நல்மனம் கொண்ட அனைவரும், நேபாள மக்களின் துயர் துடைக்க, நிதி உதவிகள் செய்வதை, திருஅவை ஆயர்களும், பணியாளர்களும், அனைத்து கத்தோலிக்கரும் ஊக்குவிக்க வேண்டும் என்று இந்திய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் மார் பசிலியோஸ் கிளீமிஸ் தொட்டுங்கல் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

இந்த மனிதாபிமான நெருக்கடி நம் ஒவ்வொருவரின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் ஓர் அழைப்பு என்று கூறிய கர்தினால் கிளீமிஸ் அவர்கள், பணம், பொருள் வடிவிலும், உழைப்பின் வடிவிலும் நேபாள மக்களுடன் இணைவது நம் கடமை என்று குறிப்பிட்டார்.

முற்றிலும் சிதைந்துபோன கிராமங்களில் நேபாள காரித்தாஸ் அமைப்பு, தன் பணியை மேற்கொண்டு வருகிறது என்றும், நேபாள நாட்டை பெருமளவு சிதைத்துள்ள நிலநடுக்கத்தால் இறந்தோரின் எண்ணிக்கை 10,000த்திற்கும் அதிகமாகும் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

பல்வேறு திருத்தலங்களும், பழமைக் கலாச்சார சின்னங்களும் பெரும் அழிவுகளைச் சந்தித்துள்ளன என்றும், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக தொற்றுநோய்கள் பரவும் ஆபத்து எழுந்துள்ளது என்றும் ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.