2015-05-11 15:43:00

திருத்தந்தை:மறைசாட்சிய மரணம் குறித்து தெளிவானச் சிந்தனை தேவை


மே,11,2015. இன்றும் பலர் கிறிஸ்தவர்களைக் கொல்லும்போது, அது இறைவனுக்குத் தாங்கள் ஆற்றும் திருப்பணி என்று நம்புகின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்கள் காலை தன் மறையுரையில் கூறினார்.

மே, 11, திங்கள் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலியாற்றுகையில், "உங்களைக் கொல்லுவோர் கடவுளுக்குத் திருப்பணி செய்வதாக எண்ணும் காலமும் வருகிறது" (யோவான் 16:2) என்று இன்றையத் திருப்பலியில் இடம்பெறும் நற்செய்தியின் வார்த்தைகளை மையப்படுத்தி, திருத்தந்தை மறையுரை வழங்கினார்.

யூதர்கள், கிரேக்கர்கள், புறவினத்தார் அனைவருக்கும், சிலுவை ஓர் இடறலாக இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இன்றும், சிலுவையின் பொருளை உணராமல் வாழ்வோர் பலர் உள்ளனர் என்று எடுத்துரைத்தார்.

லிபியா கடற்கரையில் கொல்லப்பட்ட காப்டிக் கிறிஸ்தவர்களைப் பற்றி, தன் மறையுரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று, தனக்கும், காப்டிக் முதுபெரும் தந்தை முதலாம் Tawadros அவர்களுக்கும் இடையே நிகழ்ந்த தொலைபேசி உரையாடல் பற்றியும் பேசினார்.

லிபியா கடற்கரையில் கொல்லப்பட்டவர்கள், கிறிஸ்துவின் சாட்சிகள் என்ற எண்ணம், தங்கள் தொலைபேசி உரையாடலில் இடம்பெற்றது என்பதையும் திருத்தந்தை சிறப்பாகக் குறிப்பிட்டார்.

மறைசாட்சிய மரணம் குறித்து தெளிவானச் சிந்தனையும், மன உறுதியும் கொண்டிருப்பது, கிறிஸ்தவராய் வாழ்வதற்கு ஓர் அடிப்படைத் தேவை என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையின் இறுதியில் கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.