2015-05-11 15:51:00

ஆப்ரிக்காவின் பாரம்பரிய குடும்ப மதிப்பீடு காக்கப்படவேண்டும்


மே,11,2015. வாழ்வு வரவேற்கப்படுதல், முதியோர்கள் உயரிய மரியாதையுடன் நடத்தப்படல் போன்ற மதிப்பீடுகள், ஆப்ரிக்கக் குடும்பங்களில் போற்றி பாதுகாக்கப்படவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் அத் லிமினா சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்துள்ள டோகோ நாட்டு ஆயர்களை இத்திங்களன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  குடும்பம் குறித்த உலக மாநாட்டிற்கான தயாரிப்புகள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், ஆப்ரிக்காவின் பாரம்பரிய குடும்ப மதிப்பீடுகள் முக்கியத்துவம் பெறவேண்டும் என்றார்.

பல்வேறு சவால்களை ஆப்ரிக்கக் குடும்பங்களும் சந்தித்துவருவதை தன் உரையில் எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலத்திருஅவை தன் கல்விப்பணி மற்றும் சமூகப்பணிகள் மூலம் ஆற்றிவரும் சேவையையும் பாராட்டினார்.

டோகோ நாட்டு இளைஞர்களின் வாழ்வில் திருஅவை அதிகாரிகளின் பொறுப்புணர்வு, நாட்டில் நற்செய்தியை அறிவிப்பதில் ஆண், பெண் துறவு சபைகளின் கடமை, குருத்துவப் பயிற்சி, நீதி மற்றும் ஒப்புரவுப்பணிகளில் தலத்திருவையின் அர்ப்பணம்,  ஏனைய கிறிஸ்தவ சபைகளுடன் கத்தோலிக்கத் திருஅவை ஒன்றிணைந்து உழைத்தல், பிற மதங்களுடன் பேச்சுவார்த்தைகளை ஊக்குவித்தல் போன்றவை குறித்தும் டோகோ ஆயர்களுடன் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.