2015-05-09 16:13:00

வங்காள விரிகுடா - குடியேற்றதாரரின் எண்ணிக்கை அதிகரிப்பு


மே,09,2015. சட்டத்துக்குப் புறம்பே வங்காள விரிகுடாவைக் கடந்துசெல்லும் குடியேற்றதாரரின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் இரு மடங்காகி உள்ளது என்று ஐ.நா. அகதிகளின் நிறுவனத்தின் புதிய அறிக்கை கூறுகின்றது.

தென் கிழக்கு ஆசியாவில் சட்டத்துக்குப் புறம்பே கடல்வழிப் பயணங்கள் என்ற தலைப்பில் UNHCR நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரோஹின்யா மற்றும் பங்களாதேஷ் மக்கள் மனித வர்த்தகர்களால் வங்காள விரிகுடா வழியாக, மலேசியா-தாய்லாந்து எல்லைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர் என்று கூறியுள்ளது.

2015ம் ஆண்டு சனவரி முதல் மார்ச் வரை வங்காள விரிகுடா வழியாகச் சென்றுள்ள குடியேற்றதாரரின் எண்ணிக்கை 25 ஆயிரம் என்றும், உலகின் மிக ஆபத்தான கடல் பயணங்களில் ஒன்றாக வங்காள விரிகுடா பயணம் உள்ளது என்றும் அவ்வறிக்கை தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது.

தென் கிழக்கு ஆசியாவில் மனித வர்த்தகத்தில் கிடைக்கும் இலாபமே இந்த நிலைக்குக் காரணம் எனவும், 2015ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இக்கடல் பயணத்தில் 300 பேர் இறந்துள்ளனர் எனவும் UNHCR கவலை தெரிவித்துள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.