2015-05-09 15:35:00

மொசாம்பிக் ஆயர்களின் அத் லிமினா சந்திப்பு


மே,09,2015. தமது மந்தையை மேய்ப்பதற்கு கிறிஸ்துவால் நியமிக்கப்பட்ட மேய்ப்பராகிய ஆயர்கள், கிறிஸ்துவின் மக்களுக்குச் சேவையாற்றி கிறிஸ்தவ சமூகத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்பைக் கொண்டிருக்கின்றனர் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் அத் லிமினாவை முன்னிட்டு, இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் மொசாம்பிக் ஆயர்களைச் சந்தித்து அவர்களுக்குத் தான் கூற விரும்பியதை எழுத்து வடிவில் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதில் ஆயர்களின் பணியை விளக்கியுள்ளார்.

இயேசுவே திருஅவையின் தலைமை மேய்ப்பர், அவர் பெயரிலும், அவரின் ஆணைப்படியும் அவர் பணியைச் செய்யும்போது, ஆயர்களாகிய நாம் நம்மிடமுள்ள அனைத்தையும், ஏன், நம் உயிரையும்கூட அளிக்கும் அளவுக்கு இயேசுவின் மந்தையை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் திருத்தந்தை.

அருள்பணியாளர்களின் ஆன்மீக மற்றும் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுவது உட்பட அவர்களுடன் நல்ல உறவில் வாழுமாறும் ஆயர்களை ஊக்கப்படுத்திய திருத்தந்தை, மொசாம்பிக் நாட்டுக்கு, குறிப்பாக, கல்விக்கும், நலவாழ்வுக்கும் தலத்திருஅவை ஆற்றிவரும் சிறப்பான பணிகளைப் பாராட்டினார்.

குடும்பங்கள்மீது அக்கறை செலுத்தவும், தொடக்க முதல், இயல்பான மரணம் அடையும்வரை மனித வாழ்வைப் பாதுகாக்கவும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, ஒருவர் ஒருவரை மதித்து உடன்பிறப்பு உணர்வில் வாழ்வதிலும், அமைதியை ஏற்படுத்துவதிலும் குடும்பமே முதலிடத்தில் உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டினார்.

திருமுழுக்குப் பெற்றுள்ள அனைவருக்கும் மறைப்பணி ஆர்வம் இருக்க வேண்டும், உண்மையான அப்போஸ்தலிக்க உணர்வுடன் நற்செய்தி அறிவிக்கப்படுவதை ஆயர்கள் தூண்ட வேண்டும், இறைவன் நமக்கு முன் எப்போதும் நடந்து செல்கிறார், அவர் நம்மோடு இருக்கிறார் என்ற உணர்வில் இப்பணியைச் செய்யுமாறு ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.