2015-05-09 16:04:00

நேர்மையான தேர்தலுக்காக பிலிப்பீன்ஸ் ஆயர்கள் புதிய முயற்சி


மே,09,2015. அடுத்த ஆண்டு பிலிப்பீன்சில் நடைபெறும் பொதுத் தேர்தல்களில் வாக்குச்சீட்டுகளை வாங்குவது மற்றும் விற்பதற்கு எதிரான பிரச்சாரம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர் பிலிப்பீன்ஸ் ஆயர்கள்.

நேர்மையான தேர்தலை வலியுறுத்தும் நோக்கத்தில், திருடாதே என்ற கடவுளின் கட்டளையை மையமாக வைத்து பிலிப்பீன்ஸ் ஆயர்கள் இவ்வெள்ளியன்று தொடங்கியுள்ள இப்புதிய நடவடிக்கையில், அந்நாட்டின் அருள்சகோதரிகளும் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குச் சீட்டு வர்த்தகம், ஒருவரின் மாண்பை மட்டுமல்ல, நாடு முழுவதையுமே விற்பதைக் குறிக்கின்றது என்று ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்துப் பேசிய பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் பொது விவகார ஆணைக்குழுத் தலைவர் மனிலா துணை ஆயர் Broderick Pabillo அவர்கள், அரசியல்வாதிகள் தாங்கள் விற்கும் ஓட்டுகளின் பணத்தைத் திரும்பப் பெறுவதற்குத் திருடுகிறார்கள் என்று கூறினார்.

ஆதாரம் : CBCP / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.