2015-05-09 15:41:00

இறைவன் அப்பாவிகளின் வேதனைக் குரலுக்குச் செவிசாய்க்கிறார்


மே,09,2015. அப்பாவி மக்களின் வேதனைக் குரல்கள் எழுப்பும் விண்ணப்பங்கள் உலகினரின் இதயங்களைத் திறக்கும் என்ற தனது நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஸ்ரேலின் கலிலியில் நடைபெற்ற ஒரு பெரிய பல்சமய கூட்டத்திற்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை, இறைவன் அப்பாவிகளின் வேதனைக் குரலைக் கேட்பார் மற்றும் துன்புறும் அனைவரின் வேதனைகளைக் குணப்படுத்துவார் என்று தான் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவமல்லா மறைகளோடு திருஅவைக்கு உள்ள உறவு பற்றிய Nostra aetate 2ம் வத்திக்கான் பொதுச்சங்க அறிக்கை வெளியிடப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவு, இரண்டாம் உலகப் போர் மற்றும் யூதஇன ஒழிப்பு நடவடிக்கை முடிவடைந்ததன் எழுபதாம் ஆண்டு நிறைவு ஆகிய இரண்டையும் சிறப்பிக்கும் நோக்கத்தில் இஸ்ரேலில் இந்தப் பெரிய பல்சமய கூட்டம் நடைபெற்றது.

இம்மாதம் 4 முதல் 7 வரை நடைபெற்ற இக்கூட்டத்தில், ராஞ்சி கர்தினால் டெலஸ்போர் டோப்போ உட்பட 7 கர்தினால்கள், 25 ஆயர்கள், 50 அருள்பணியாளர்கள், 120 ரபிகள் என ஏறக்குறைய நானூறு பேர் கலந்து கொண்டனர்.

திருஅவையின் உறுப்பினர்களுக்கு கிறிஸ்தவத்தில் பயிற்சி அளிக்கும் Neocatechumenal Way என்ற பக்த அமைப்பு இக்கூட்டத்தை நடத்தியது.

மேலும், “பிறர் நம்மை அன்புகூராமல் இருக்கும்போதுகூட நாம் ஒவ்வொருவரையும் அன்புகூரவும், கனிவுடன் வாழவும் கற்றுக்கொள்வோம்” என்று, இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டரில் ஒன்பது மொழிகளில் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.