2015-05-08 15:57:00

போலந்தில் 2ம் உலகப்போர் முடிந்ததன் 70ம் ஆண்டு நிகழ்வு


மே,08,2015. பாசிசக் கொள்கைகளைத் தோற்கடிப்பதற்கு உலகில் இடம்பெற்ற பெருமளவுத் தியாகங்களையும், அதற்குப் பலியான இலட்சக்கணக்கான மக்களையும் நினைவுகூர்ந்தார் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்.

ஐரோப்பாவில் 2ம் உலகப் போர் முடிந்ததன் 70ம் ஆண்டு நிறைவு நிகழ்வு, போலந்தில் இவ்வியாழனன்று நடைபெற்றதில் உரையாற்றிய பான் கி மூன் அவர்கள், பல நாடுகளில் கடும் அழிவுகளை ஏற்படுத்திய இந்தப் போர், தீமையை வெற்றிகண்டதன் அடையாளமாகவும் உள்ளது என்று கூறினார்.

2ம் உலகப் போரின் கடும் துன்பங்களின் சாம்பலில் 1945ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் நிறுவனம் உருவாக்கப்பட்டதையும் குறிப்பிட்டுப் பேசிய பான் கி மூன் அவர்கள், அனைத்துலகச் சட்டத்தின் அனைத்துக் கொள்கைகளையும் சுட்டிக்காட்டினார்.

உக்ரேய்னில் இடம்பெறும் சண்டைக்குத் தீர்வு காண்பது உட்பட ஐரோப்பா சில முக்கிய சவால்களை இக்காலத்தில் எதிர்நோக்குகின்றது என்றும் உரைத்த பான் கி மூன் அவர்கள், உறுதியான வளர்ச்சி, மனித உரிமைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தல் உட்பட ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துவரும் முயற்சிகளையும் பாராட்டினார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.