2015-05-08 15:32:00

திருத்தந்தை-விளையாட்டில் வெற்றியடைவதற்காக ஏமாற்றுவது கேவலம்


மே,08,2015. விளையாட்டில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்கள், விளையாட்டில் மட்டுமல்லாமல், வாழ்விலும், அச்சமின்றி ஆர்வத்துடனும் துணிச்சலுடனும் உண்மையான நன்மையைத் தேடுமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலிய டென்னிஸ் விளையாட்டு கூட்டமைப்பின் (FIT) விளையாட்டு வீரர்கள், நிர்வாகிகள், இரசிகர்கள், குடும்பத்தினர் என ஏழாயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்களை,  முத்திப்பேறு பெற்ற ஆறாம் பவுல் அரங்கத்தில் இவ்வெள்ளி நண்பகலில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

விளையாட்டு வீரர்கள், தங்கள் வாழ்வில் சிறந்ததை இறைவனுக்கும், பிறருக்கும்  வழங்குமாறும் கூறிய திருத்தந்தை, தங்களின் திறமைகளை, மக்கள் மத்தியில் நட்பை வளர்ப்பதற்குப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

விதிகளை மீறியும், பிறரை ஏமாற்றியும் வெற்றி பெறுவது மிகவும் கேவலமானது என்றுரைத்த திருத்தந்தை, விளையாட்டில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைக் குவிப்பதற்கு, குறுக்கு வழிகளை நாட வேண்டாமெனவும் கூறினார்.

கல்வி, கல்வியும் குடும்பமும், விளையாட்டும் வேலையும் ஆகிய மூன்றும், சிறார், வளர்இளம் பருவத்தினர், இளையோர் ஆகிய மூன்று நிலையினருக்கும் மூன்று அடிப்படைத் தூண்களாக அமைந்துள்ளன என்றும், இவை மூன்றும் ஒருங்கிணைந்த முழுமையான வாழ்வுக்கு உதவும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ஆன்மீகத்திலும், உறவுகளிலும் மனிதரை உருவாக்குவதற்கு விளையாட்டு உதவுவதால், இதில் திருஅவை எப்போதும் ஆர்வம் காட்டி வருகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

FIT என்ற இத்தாலிய டென்னிஸ் விளையாட்டு கூட்டமைப்பு, முதலில் 1880ம் ஆண்டில் தூரின் நகரில் தொடங்கப்பட்டு, பின்னர், 1894ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி உரோமையில் தொடங்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.