2015-05-07 16:08:00

திருத்தந்தை - செயல் வடிவில் வெளிப்படுவதே உண்மையான அன்பு


மே,07,2015. செயல் வடிவத்திலும், தொடர்புகளிலும் வெளிப்படுவதே உண்மையான அன்பு; நான்கு சுவர்களுக்குள் வாழும் துறவியரும் இத்தகைய அன்பிலிருந்து விலகி நிற்க முடியாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

மே 7, இவ்வியாழன் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் வழங்கிய மறையுரையில், "என் அன்பில் நிலைத்திருங்கள்" என்று இயேசு கூறிய நற்செய்தியை அடிப்படையாகக் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

உண்மை அன்பையும், போலியான அன்பையும் பிரிக்கும் இருகூறுகள் உள்ளன என்று கூறியத் திருத்தந்தை, செயல்களில் வெளிப்படுவதும், தொடர்புகளில் ஈடுபடுவதும் அவ்விரு கூறுகள் என்று எடுத்துரைத்தார்.

வெறும் வார்த்தைகளில், வெறுமையான கனவுகளில் வெளிப்படும் அன்பு உண்மை அன்பல்ல என்பதை, ஆண்டவரே, ஆண்டவரே என்று அழைப்பது மட்டும் போதாது என்று இயேசு விடுக்கும் எச்சரிக்கை விளைக்குகிறது என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

வெறும் ஆர்வத்தால் உருவாகும் உணர்வு உண்மையான அன்பல்ல, மாறாக, "நான் பசித்திருந்தேன், எனக்கு உணவு தந்தீர்கள்" என்று செயல்வடிவில் வெளியாகும் அன்பே உண்மை அன்பு என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.

அன்பு, தொடர்பில் வெளிப்படும் என்பது, உண்மையான அன்பின் இரண்டாவது கூறு என்று கூறியத் திருத்தந்தை, நான்கு சுவர்களுக்குள் தங்களையே தனிமைப்படுத்திக் கொள்ளும் துறவியரும், இறைவனோடும், அயலவரோடும் ஆன்மீக அளவில் தொடர்பு கொண்டுள்ளனர் என்று எடுத்துரைத்தார்.

இந்த உலகம் தர முடியாத அன்பை உணரவும், அதனால் மகிழவும், அந்த மகிழ்வை மற்றவரோடு பகிரவும் எங்களுக்கு அருள்தாரும் என்ற செபத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையை நிறைவு செய்தார்.

“நமக்குத் தேவையான உணவை நாமே சம்பாதிக்க முடியாதபோது, நாம், சுயமதிப்பை இழக்கிறோம். இது, குறிப்பாக, இன்றைய இளையோரிடையே உள்ள பெரும் துன்பமான நிலை” என்ற வார்த்தைகளை, இவ்வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒன்பது மொழிகளில் தன் Twitter செய்தியாக வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.