2015-05-07 16:48:00

ஐ.நா. தலைமையகத்தில் மீண்டும் அமைதி மணி நிறுவப்பட்டது


மே,07,2015. அமைதியில் வாழ்வதற்கு இவ்வுலகம் கொண்டிருக்கும் ஆவல், இந்த அமைதி மணி என்ற அடையாளத்தில் வெளிப்படுகிறது என்றும், தான் இதனைக் கடந்து செல்லும்போதெல்லாம், உலக அமைதியை விழைவதற்கு ஒரு தூண்டுதலாக இது அமைந்துள்ளது என்றும் ஐ.நா. பொதுச் செயலர், பான் கி மூன் அவர்கள் கூறினார்.

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமைச் செயலகத்தின் தோட்டத்தில் பல ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த அமைதி மணி, மறு சீரமைப்புப் பணிகளின் காரணமாக, கடந்த ஐந்தாண்டுகளாய் வேறொரு இடத்தில் வைக்கப்பட்டிருந்தது.

மே 6, இப்புதனன்று அமைதி மணி மீண்டும் ஐ.நா. தலைமையகத் தோட்டத்தில் நிறுவப்பட்டபோது, அந்நிகழ்வில் பங்கேற்ற பான் கி மூன் அவர்கள், அமைதி இன்னும் இவ்வுலகில் அதிகம் தேவைப்படுகிறது என்று கூறினார்.

இரண்டாம் உலகப் போரின் கொடுமைகளை அனுபவித்த Chiyoji Nakagawa என்ற ஜப்பானிய அமைதி ஆர்வலரின் முயற்சியால், அமைதி மணி உருவாக்கப்பட்டு, ஐ.நா. தலைமையகத்திற்கு, 1954ம் ஆண்டு, அன்பளிப்பாக அளிக்கப்பட்டது.

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ம் தேதி, அனைத்துலக அமைதி நாள் சிறப்பிக்கப்படும்போது, அமைதி மணி ஒலிக்கப்படும் என்று கூறிய பான் கி மூன் அவர்கள், 2001ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரின் வர்த்தகக் கோபுரங்கள் தாக்கப்பட்ட ஆண்டில் மட்டும் இந்த அமைதி மணி ஒலிக்கும் நிகழ்வு நடைபெறவில்லை என்று கூறினார்.

இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொணரும் ஒரு முயற்சியாக, 1945ம் ஆண்டு மே 7ம் தேதி, பிரான்ஸ் நாட்டின் Reims அனுமிடத்தில், ஜெர்மானியப் படைகள், தங்கள் ஆயுதங்களைக் களைந்து, சரண் அடைந்தனர் என்பதும், மே 8ம் தேதி, ஐரோப்பிய வெற்றிநாள் என்று சிறப்பிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கவை.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.