2015-05-07 16:31:00

Jihadiயினரின் வன்முறைகளால் இஸ்லாமியரும் துன்புறுகின்றனர்


மே,07,2015. இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவான Jihadiயினரின் வன்முறைகளால் கிறிஸ்தவர்கள் மட்டுமன்றி, இஸ்லாமியரும் பெருமளவில் துன்புறுகின்றனர் என்று மாலி நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் Jean-Baptiste Tiama அவர்கள், Fides செய்திக்கு அளித்த பெட்டியில் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு நாட்டின் ஆயர்களும், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் அத் லிமினா பயணத்தை முன்னிட்டு, தற்போது உரோம் நகருக்கு வருகை தந்திருக்கும் மாலி ஆயர்கள் குழுவின் தலைவரான ஆயர் Tiama அவர்கள், இம்மாதம் 15ம் தேதி மாலி நாட்டில் கையெழுத்திடப் படவிருக்கும் அமைதி ஒப்பந்தம் குறித்து Fides செய்திக்குப் பேட்டியளித்தார்.

மாலி நாட்டின் எளிய மக்கள் அனைவரும் விரும்புவது அமைதி மட்டுமே என்று கூறிய ஆயர் Tiama அவர்கள், மே 15ம் தேதி நிறைவேற்றப்படும் அமைதி ஒப்பந்தம் வெற்றியடைய மாலித் தலத்திருஅவை தொடர்ந்து செபித்து வருகிறது என்று கூறினார்.

அடிப்படை வாதக் குழுவான Jihadiயினர் போதிக்கும் இஸ்லாமியக் கொள்கைகள், உண்மையில் இஸ்லாம் கொள்கைகள் அல்ல என்பதை, மாலியில் வாழும் இஸ்லாமியர் வலியுறுத்தி வருவது மனதுக்கு நிறைவைத் தருகிறது என்று, ஆயர் Tiama அவர்கள் தன் பேட்டியில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.