2015-05-06 14:19:00

திருமண அருளடையாளம், விசுவாசத்தின், அன்பின் மாபெரும் செயல்


மே,06,2015. கடந்த சில வாரங்களாக, புதன் மறைக்கல்வி உரைகளில், குடும்பம் குறித்த தன் சிந்தனைகளைப் பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று, உரோம் நகர் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு அதே மறைக்கல்வி உரையின் தொடர்ச்சியாக, திருமணம் குறித்த சிந்தனைகளின் இரண்டாம் பகுதியை வழங்கினார்.

கிறிஸ்தவத் திருமணத்தின் அழகு குறித்து தற்போது சிந்திப்போம். திருமணம் எனும் அருளடையாளமே, திருஅவை சமூகத்தையும் சமுதாயத்தையும் கட்டியெழுப்புகின்றது. இறைவனின் படைப்புத் திட்டத்தில் இது பொறிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இறையருளின் துணையோடு எண்ணற்ற ஆண்களும் பெண்களும் திருமணவாழ்வை முழுமையாக வாழ்ந்துள்ளனர். மனிதகுலத்திற்கான இறைத்திட்டத்தில் திருமணம் என்பது விசுவாசச் செயல்பாடு மற்றும் தன்னலமற்ற அன்பின் செயல்பாடு. திருமண அன்பு என்பது, கிறிஸ்து தன் திருஅவை மீது கொண்டுள்ள அன்பின் சாயல் என்று நமக்கு எடுத்துரைக்கிறார் புனித பவுல். கிறிஸ்து தன் திருஅவையை அன்புகூர்ந்து, அதற்காக தன் உயிரையே கையளித்ததுபோல், ஒரு கணவரும் மனைவியும் ஒருவரையொருவர் அன்புகூரவேண்டும். ஓர் ஆணும் பெண்ணும் ஆண்டவரில் திருமணம் புரியும்போது, அவர்கள் தங்களுக்காக மட்டுமோ, தங்கள் குடும்பங்களுக்காகவோ வாழாமல், அனைத்து மக்களுக்காகவும் வாழ்வதன் வழியாக திருஅவையின் மறைபோதக வாழ்வில் பங்குபெறுகின்றனர். ஆகவே, இத்தகைய அழகுச் செறிவை வெளிப்படுத்தும் ஒவ்வொரு திருமணம் வழியாகவும் திருஅவையின் வாழ்வு வளமைப்படுத்தப்படுகிறது. அதேவேளை, திருமணங்கள் காயப்படும்போது, திருஅவையின் வாழ்வு வளம் குன்றுகிறது. விசுவாசத்துடனும் மன உறுதியுடனும் இந்த அருளடையாளத்தை வாழும் தம்பதியர், விசுவாசம், அன்பு, நம்பிக்கை எனும் கொடைகளை அனைவருக்கும் வழங்குவதன்வழியாக, திருஅவைக்குத் துணைபுரிகின்றனர். அதேவேளை, இந்தக் கொடைகளை மற்றவர்களும் தங்கள் திருமண வாழ்விலும் குடும்பங்களிலும் அனுபவிக்கவும் உதவுகின்றனர். திருமணம்புரிந்த தம்பதியர்கள், இறைவனின் கனிவிலும், திருஅவையின் தாய்க்குரிய அக்கறையிலும் முழு நம்பிக்கை கொண்டு, இந்த மறையுண்மையை முழுமையாக வாழ்வார்களாக.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையின் இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.