2015-05-06 16:39:00

ஈராக் மக்களின் விசுவாசம், ஒளிமிக்க அடையாளம்


மே,06,2015. ஈராக் மக்களிடையே விளங்கும் விசுவாசம், அவர்கள் காட்டும் பிறரன்பு ஆகிய உன்னத பண்புகள், ஒளிமிக்க அடையாளங்களாக விளங்குகின்றன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இம்மாதத் துவக்கத்தில், ஈராக்கில் மூன்று நாள் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்ட, கீழைவழிபாட்டு முறை திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால் லியோனார்தோ சாந்திரி அவர்கள், தன் பயணத்தின் இறுதியில், அந்நாட்டு ஆயர்களிடம் இவ்வாறு கூறினார்.

பல்வேறு துயரங்களைச் சந்தித்துவரும் ஈராக் மக்களின் மனத்துணிவும், அவர்கள் மத்தியில் உழைக்க முன்வரும் அருள்பணியாளர்கள், துறவியர் ஆகியோரின் தன்னலமற்றத் தியாகமும் தன் மனதில் ஆழப் பதிந்துள்ளன என்று கர்தினால் சாந்திரி அவர்கள் எடுத்துரைத்தார்.

ஈராக் மக்களைத் தன் உள்ளத்தில் எப்போதும் தாங்கி, அவர்களுக்காகச் செபித்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆசீரை அவர்களுக்கு வழங்குவதாக, கர்தினால் சாந்திரி அவர்கள் தன் உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.

கடந்த சில மாதங்களில் இரண்டாவது முறையாக ஈராக் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட கர்தினால் சாந்திரி அவர்களை, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, முதலாம் லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்களும், சிரிய கத்தோலிக்க முதுபெரும் தந்தை, மூன்றாம் இக்னேசியஸ் ஜோசப் யூனான் அவர்களும் சந்தித்தனர்.

ஆதாரம் : VIS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.