2015-05-06 16:20:00

"அமைதியின் தொழிற்சாலை" திட்டம் குறித்து அருள்பணி லொம்பார்தி


மே,06,2015. அடுத்தத் தலைமுறையினருக்கு நாம் கற்றுத்தரும் கல்வியை மாற்றாமல், இவ்வுலகை மாற்ற முடியாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதை, வத்திக்கான் செய்தித்தொடர்பாளர் அருள்பணி பெதெரிக்கோ லொம்பார்தி அவர்கள் செய்தியாளர்களிடம் இச்செவ்வாயன்று கூறினார்.

உலகின் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இணைந்து, "அமைதியின் தொழிற்சாலை" ("Factory of Peace") என்ற ஒரு திட்டத்தைத் துவக்கியிருப்பதைக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அருள்பணி லொம்பார்தி அவர்கள், மே 11ம் தேதி, 7000த்திற்கும் அதிகமான சிறுவர், சிறுமியரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானில் சந்திக்கவிருப்பது குறித்தும் பேசினார்.

அமைதியும், நன்மையும் நிறைந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க, மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் கலாச்சாரத்தை உருவாக்கவேண்டும் என்று திருத்தந்தை தன் உரைகளில் வலியுறுத்தி வருவதையும், அருள்பணி லொம்பார்தி அவர்கள் செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப்பணியை ஏற்பதற்கு முன், புவனோஸ் அயிரேஸ் பேராயராகப் பணியாற்றிய காலத்திலிருந்தே, Scholas Occurentes என்றதோர் அமைப்பைத் துவங்கினார் என்றும், அந்த முயற்சி இன்று உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது என்றும் அருள்பணி லொம்பார்தி அவர்கள் எடுத்துரைத்தார்.

நாடுகள் என்ற எல்லைகளைத் தாண்டி, விளையாட்டு, கலை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அனைத்து துறைகளின் உதவியுடன், இளைய தலைமுறையினர்,  ஒருவர் ஒருவரைச் சந்திக்கும் கலாச்சாரத்தையும், ஒருவர் ஒருவரை மதிக்கும் மனப்பக்குவத்தையும் உருவாக்குவது, Scholas Occurentes அமைப்பின் முக்கியக் குறிக்கோள் என்று அருள்பணி லொம்பார்தி அவர்கள் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.