2015-05-06 14:26:00

அமைதி ஆர்வலர்கள்:1980ல் நொபெல் அமைதி விருது (Esquivel)


மே,06,2015. “புதிய ஒரு சமுதாயத்தைப் படைப்பதற்கு, மிகுந்த மன உறுதியைக் காட்டும்போதும்கூட, காழ்ப்புணர்வு அல்லது வன்மம் இன்றி நம் நட்புக் கரங்களை அகல விரிக்க வேண்டும், உண்மை மற்றும் நீதியைப் பாதுகாப்பதில் ஒருபோதும் அலைபாயும் மனத்தைக் கொண்டிருக்கக் கூடாது”. இவ்வாறு சொன்னவர் Adolfo Pérez Esquivel. இவர், அர்ஜென்டீனா நாட்டின் மனித உரிமை ஆர்வலரும், சமுதாயத்தைச் சமைப்பவரும், அமைதி விரும்பியும், கலைஞரும், ஓவியரும், எழுத்தாளரும், சிற்பியுமாவார். இவருக்கு 1980ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. ஒரு காலத்தில் இஸ்பெயின் நாட்டின் Galiciaவின் Poio நகரிலிருந்து அர்ஜென்டீனாவில் குடியேறிய இவரது தந்தை ஒரு மீனவர். Pérez Esquivel, 1931ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அர்ஜென்டீனா தலைநகர் புவனோஸ் ஐரெஸ் நகரில் பிறந்தார். இவருக்கு மூன்று வயது நடந்தபோது இவரது தாய் இறந்தார். குடும்பத்தை வறுமை வாட்டினாலும், Manuel Belgrano கலைப் பள்ளியிலும், La Plata தேசிய பல்கலைக்கழகத்திலும் இவர் கல்வி கற்றார். இங்குதான் இவர் ஓவியராகவும், சிற்பியாகவும் பயிற்சிபெற்றார். சிற்பக்கலைப் பேராசிரியராக நியமிக்கப்பட்ட இவர், பல்வேறு சிற்ப ஊடகங்களில் பணியாற்றினார். இருபத்தைந்து ஆண்டுகள் ஆரம்பப் பள்ளியிலிருந்து பல்கலைக்கழகம் வரை பல்வேறு நிலைகளில் ஆசிரியராகவும், பேராசிரியராகவும் பணியாற்றினார்.

Pérez Esquivel அவர்கள், இலத்தீன் அமெரிக்காவில் மையங்களைக் கொண்டிருந்த கிறிஸ்தவ அமைதி ஆர்வலர் குழுக்களுடன் சேர்ந்து 1960களில் பணியாற்றினார். வன்முறையற்ற வழிகளில் ஏழைகளின் விடுதலையை ஊக்குவிக்கும் இலத்தீன் அமெரிக்க குழுக்களுக்கு பொது ஒருங்கிணைப்பாளராக 1974ம் ஆண்டில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அச்சமயத்தில் தனது ஆசிரியப் பணியை இரசித்துச் செய்தார். அர்ஜென்டீனாவில் 1976ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இடம்பெற்ற இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பில் திட்டமிட்ட அடக்குமுறைகள் அரங்கேறின. இதில் சர்வாதிகாரி Jorge Videla ஆட்சியைக் கைப்பற்றினார். அச்சமயத்தில் Pérez Esquivel அவர்கள், அர்ஜென்டீனாவில் மனித உரிமைகளைக் காப்பதற்காகப் போராடிய குழுக்களுக்குப் பயிற்சியளிக்கவும், நிதிஉதவி செய்யவும் தனது பங்கை அளித்தார். அத்துடன், Dirty War என்று அழைக்கப்படும் அந்நாட்டுப் போரில் கடுமையாய்ப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இவர் ஆதரவளித்தார். 1974ம் ஆண்டு முதல் 1983ம் ஆண்டுவரை அந்நாட்டில் இராணுவ அரசுக்கும், மற்ற குழுக்களுக்கும் இடையே நடந்த தாக்குதல்களை Dirty War என்று அழைக்கின்றனர். இச்சூழலில், 1974ம் ஆண்டில் "சேவை, அமைதி மற்றும் நீதி அமைப்பு"(NGO Servicio Paz y Justicia)என்ற அரசு சாரா அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. SERPAJ என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த அமைப்பை Pérez Esquivel அவர்களும் சேர்ந்து நிறுவினார். இந்த அமைப்பின்மூலம், அர்ஜென்டீனாவில் இராணுவ ஆட்சியால் நடத்தப்பட்ட கொடூரங்களுக்கு எதிராக அனைத்துலக அளவில்   கண்டனங்கள் எழும்புவதை ஊக்குவிக்கவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் இவர் உதவினார். SERPAJ அமைப்பு, அனைத்துலக ஒப்புரவுத் தோழமை அமைப்பின்(IFOR) உறுப்பினராகியது. இதனால் IFOR என்ற இத்தோழமை அமைப்பு, Esquivel அவர்களின் அமைதிப் பணிக்கும், மனித உரிமைகள் பாதுகாப்புக்கும் தொடக்கமுதல் ஆதரவு வழங்கியது.

Pérez Esquivel அவர்கள் 1975ம் ஆண்டில் பிரேசில் நாட்டு இராணுவக் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். 1976ம் ஆண்டில் ஈக்குவதோர் நாட்டில் இலத்தீன் அமெரிக்க மற்றும் வட அமெரிக்க ஆயர்களுடன் இவர் சிறை வைக்கப்பட்டார். 1977ம் ஆண்டில் புவனோஸ் ஐரெஸ் நகரில் அர்ஜென்டீனா மத்திய காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு, சித்ரவதைக்கு உள்ளாகி, 14 மாதங்கள் எவ்வித விசாரணையுமின்றி வைக்கப்பட்டார். இவர் சிறையில் இருந்த சமயத்தில், புனித திருத்தந்தை 23ம் ஜான் அமைதி நினைவு விருது உட்பட பல்வேறு பட்டயங்களையும் பெற்றார். 1976ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்ற Mairead Corrigan, Betty Williams ஆகிய இருவரும் இவரது பெயரை நொபெல் அமைதி விருதுக்குப் பரிந்துரை செய்தனர். இறுதியில், Pérez Esquivel அவர்கள் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எடுத்த கடின முயற்சிகளைப் பாராட்டி, 1980ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி நொபெல் அமைதி விருதைப் பெற்றார்.

Pérez Esquivel, 1980ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்றபோது, இதனை கடும் ஏழ்மையில் வாழும் எனது சகோதர சகோதரிகள் மற்றும் மிகவும் ஒதுக்கப்பட்டவர்கள்  பெயரால் இவ்விருதைப் பெறுவதாகக் கூறினார். இந்த விருது நிதியை பிறரன்புக்காக வழங்கினார். சர்வாதிகாரப் போக்குகள் தொடர்ந்து துன்புறுத்தி வந்தாலும், Plaza de Mayo  அன்னையர் அமைப்புக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறார். பின்னாளில், அர்ஜென்டீனா நாட்டுப் பூர்வீகக் குடிமக்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஆதரவாகச் செயல்படும் இயக்கங்களோடும் பணிசெய்து வருகிறார். அமெரிக்க நாடுகளின் கட்டுப்பாடற்ற வர்த்தகம் மற்றும் சிக்கன கொள்கைகளுக்கு எதிராகவும் போராடி வருகிறார். Pérez Esquivel அவர்களுக்கு 1999ம் ஆண்டில் திருஅவையின் அவனியில் அமைதி விருதும் வழங்கப்பட்டது.

Pérez Esquivel அவர்கள், இத்தாலியின் மிலானை மையமாகக் கொண்ட பன்னாட்டு மனித உரிமைகள் மற்றும் மக்கள் விடுதலை இயக்கம், இலத்தீன் அமெரிக்க அமைதி மற்றும் நீதி அமைப்பின் தலைவராகவும், நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். "Caminando Junto al Pueblo" அதாவது மக்களோடு ஒன்றுசேர்ந்து நடத்தல் என்ற தலைப்பில் நூல் ஒன்றையும் 1995ம் ஆண்டில் வெளியிட்டார். இலத்தீன் அமெரிக்காவில் வன்முறையற்ற தனது அனுபவங்களை அந்நூலில் பகிர்ந்து கொண்டுள்ளார். 1998ம் ஆண்டில் புவனோஸ் ஐரெஸ் பல்கலைக்கழகத்தில் அமைதி மற்றும் மனித உரிமைகள் கல்விக்குப் பேராசிரியராக இவர் நியமிக்கப்பட்டார். உபஇராணுவப் படைகள், சிறாருக்குப் பயிற்சியளிப்பதை நாத்சி ஜெர்மனியின் ஹிட்லர் இளையோர் அமைப்போடு ஒப்பிட்டுப் பேசி அந்நடவடிக்கையை 2010ம் ஆண்டில் கண்டித்துக் குரல் எழுப்பினார். லிபியா உள்நாட்டுப் போரில் ஐரோப்பிய இராணுவத் தலையீட்டைக் கண்டித்துப் பேசினார். இவ்வாறு மனித உரிமைகள் பாதுக்காக்கப்படுவதற்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் Pérez Esquivel.

Pérez Esquivel அவர்கள், அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டதன் 500ம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் விதமாக 1992ம் ஆண்டில் இலத்தீன் அமெரிக்க 15 சிலுவைப்பாதை நிலைகளை அமைத்தது உட்பட இவர் தனது சிற்ப மற்றும் ஓவியத் திறமைகளால் பல நினைவுச் சின்னங்களையும், சுவர் ஓவியங்களையும் வரைந்துள்ளார். புலம்பெயர்ந்தவர்கள் நினைவாக இவர் எழுப்பிய நினைவுச் சின்னம் சுவிட்சர்லாந்து நாட்டில் ஐ.நா. UNHCR புலம்பெயர்ந்தோர் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.