2015-05-05 15:12:00

விவிலியத் தேடல் – திருமண விருந்து உவமை – பகுதி 1


மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணப்படும் 'இரு புதல்வர்கள் உவமை'யில் நாம் கடந்த நான்கு வாரங்கள் தேடல்களை மேற்கொண்டோம். 'இரு புதல்வர்கள் உவமை'யைக் கூறிமுடித்ததும், இயேசு, "மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்" (மத். 21:33) என்ற வார்த்தைகளுடன், 'கொடிய குத்தகைக்காரர் உவமை'யை, தொடர்ந்து சொல்கிறார். 'ஒத்தமை நற்செய்திகள்' (Synoptic Gospels) என்று சொல்லப்படும் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும், 'கொடிய குத்தகைக்காரர் உவமை', வார்த்தைக்கு வார்த்தை அதிக மாற்றங்களின்றி பதிவு செய்யப்பட்டுள்ளது. லூக்கா நற்செய்தியில் இவ்வுவமையைக் குறித்து நாம் ஆழமாகச் சிந்தித்துள்ளோம். எனவே, இவ்வுவமையில் நம் தேடலை மேற்கொள்ளாமல், இதைத் தொடர்ந்து, நற்செய்தியாளர் மத்தேயு பதிவு செய்துள்ள 'திருமண விருந்து உவமை'யில் இன்று நாம் தேடலைத் துவக்குவோம்.

விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களும், அழைப்பை ஏற்க மறுத்தவர்களும் என்ற மையக் கருத்துடன் மத்தேயு கூறியுள்ள 'திருமண விருந்து உவமை'க்கும் (மத். 22: 1-14), லூக்கா நற்செய்தியில், இதே கருத்துடன் கூறப்பட்டுள்ள 'பெரிய விருந்து உவமை'க்கும் (லூக். 14: 15-24) பல ஒப்புமைகள் இருப்பினும், ஒரு சில வேற்றுமைகளும் உள்ளன. இந்த உவமைகள், எவ்வகையான சூழல்களில் கூறப்பட்டன என்ற வேற்றுமை, முதலில் நம் கவனத்தை ஈர்க்கின்றது.

விருந்தொன்றில் பங்கேற்கச் சென்ற இயேசு, 'பெரிய விருந்து உவமை'யைச் சொன்னார் என்று நற்செய்தியாளர் லூக்கா கூறுகிறார். ஓய்வுநாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். அங்கே நீர்க்கோவை நோயுள்ள ஒருவர் அவர்முன் இருந்தார். (லூக்கா 14:1) என்று அச்சூழலை நற்செய்தியாளர் லூக்கா விவரிக்கின்றார். பரிசேயர் தலைவர் வீட்டுக்கு வந்தவர்கள், இயேசுவைக் கூர்ந்து கவனித்தது; நீர்க்கோவை நோயுள்ள ஒருவரை அவ்வீட்டில் சந்திக்கும் இயேசு, ஒய்வு நாளென்றும் பாராமல், அவரைக் குணமாக்கியது; நடைபெற்ற அவ்விருந்தில், பலர், முதலிடங்களைத் தேடிச் சென்றதைக் கண்டு, இயேசு அறிவுரை கூறியது... என்று, பல பிரச்சனைகளுடன் கூடிய, ஓர் இறுக்கமானச் சூழலை, நற்செய்தியாளர் லூக்கா சித்திரித்துள்ளார்.

நற்செய்தியாளர் மத்தேயுவோ, 22ம் பிரிவின் ஆரம்பத்தில், 'திருமண விருந்து உவமை'யை பின்வரும் சொற்களால் அறிமுகம் செய்கிறார்:

மத்தேயு 22: 1-3

இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார். திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார்.” என்பது மத்தேயு தரும் அறிமுகம்.

மேலோட்டமானப் பார்வைக்கு, இந்த வரிகள் பிரச்சனைகள் ஏதுமற்ற அறிமுகம்போல் தோன்றினாலும், இவ்வுவமைக்கு முன்னதாகக் கூறப்பட்டுள்ள 'கொடிய குத்தகைக்காரர் உவமை', இயேசுவைச் சுற்றியிருந்தோரிடையே உருவாக்கியச் சூழலை இணைத்துச் சிந்திக்கும்போது, அது, 'திருமண விருந்து உவமை'க்கு மற்றொரு சூழலைத் தருகிறது.

'கொடிய குத்தகைக்காரர் உவமை'யின் இறுதியில், இயேசு கூடுதலாக, மற்றுமோர் உருவகத்தைப் பயன்படுத்தியுள்ளார். கட்டடத்துக்குப் பயன்படுத்தப்படும் 'மூலைக்கல்' பற்றிய உருவகம் அது. 'மூலைக்கல்'லின் முக்கியத்துவத்தை இடித்துரைப்பதுபோல, திருப்பாடல் 118ன் வரிகளை இயேசு மேற்கோளாகப் பயன்படுத்துகிறார்:

திருப்பாடல் 118: 22-23

கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!

இஸ்ரயேல் மக்களால், அதிலும் குறிப்பாக, மதத் தலைவர்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள், இறையரசு என்ற கட்டடத்தின் 'மூலைக்கல்'லாக மாறுவர் என்று கூறிய இயேசு, தொடர்ந்து, மற்றொரு கடுமையான எச்சரிக்கையையும் இணைக்கிறார்:

இந்தக் கல்லின்மேல் விழுகிறவர் நொறுங்கிப்போவார். இது யார் மேல் விழுமோ அவரும் நசுங்கிப் போவார் (மத். 21:44)

இயேசு கூறிய 'கொடிய குத்தகைக்காரர் உவமை'யும், அதைத் தொடர்ந்து, அவர் பயன்படுத்திய 'மூலைக்கல்' உருவகமும், அங்கு உருவாக்கியச் சூழலை நற்செய்தியாளர் மத்தேயு இவ்விதம் விவரிக்கிறார்:

மத்தேயு 21: 45-46

தலைமைக் குருக்களும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்டபோது, தங்களைக் குறித்தே அவர் கூறினார் என்று உணர்ந்து கொண்டனர். அவர்கள் அவரைப் பிடிக்க வழிதேடியும் மக்கள் கூட்டத்தினர் அவரை இறைவாக்கினர் என்று கருதியதால் அவர்களுக்கு அஞ்சினார்கள்.

இத்தகைய ஒரு சூடானச் சூழலில் 'திருமண விருந்து உவமை'யை இயேசு கூறியதாக, நற்செய்தியாளர் மத்தேயு பதிவு செய்துள்ளார். திராட்சைத் தோட்டத்தை, குத்தகைக்கு எடுத்த யூதர்களும், யூத மதத் தலைவர்களும், குத்தகைத் தொகையைத் தருவதற்குப் பதில், தோட்டத்து உரிமையாளருக்கு எதிராகக் குற்றம் புரிந்ததால், வேறு மக்களுக்கு அந்த குத்தகை விடப்படும் என்ற கருத்தை, 'கொடிய குத்தகைக்காரர் உவமை' வழியே இயேசு வலியுறுத்தினார். அதையொத்த கருத்தை மீண்டும் வலியுறுத்த, 'திருமண விருந்து உவமை'யை இயேசு கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரைகளில் உருவகங்களைப் பயன்படுத்திவருவதை நாம் அறிவோம். 'திருமண விருந்து உவமை'க்குள் நாம் அடியெடுத்து வைக்கும் வேளையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை அவர்கள், தன் மறையுரையில் பயன்படுத்திய ஓர் உருவகம் நினைவுக்கு வருகிறது.

"'கிறிஸ்தவ வாழ்வின் அடையாள அட்டையைக் காட்டுங்கள்' என்று யாராவது கேட்டால், நாம் அவர்களுக்குக் காட்டக்கூடியது, ஓர் அழைப்பிதழே" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

"கிறிஸ்தவ வாழ்வு ஓர் அழைப்பு. அழைப்பிதழ் இன்றி இவ்வாழ்வில் அடியெடுத்துவைக்க இயலாது. 'நான் இவ்வாழ்வின் நுழைவாயிலுக்குச் சென்றதும், நுழைவுச் சீட்டை பணம் கொடுத்து வாங்குவேன்' என்று யாராலும் சொல்லமுடியாது. ஏனெனில், அழைப்பின்பேரில் மட்டுமே இங்கு நுழைய முடியும். விலைமதிப்பற்ற இவ்வழைப்பை நம்மால் விலைகொடுத்து வாங்க முடியாது. அந்த ஒப்பற்ற விலையை இறைமகன் இயேசு தன் இரத்தத்தால் ஏற்கனவே வழங்கிவிட்டார்" என்ற அழகியதோர் உருவகத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் கூறினார்.

ஆசிய நாடுகளில், விருந்தோம்பல் என்பது, நம்மை அடையாளம் காட்டும் ஓர் அற்புதப் பண்பு. “Atithi Devo Bhava” அதாவது, விருந்தினரைக் கடவுளாகக் கருதவேண்டும் என்பது, இந்தியக் கலாச்சாரத்தில் ஊறிய ஒரு பண்பு. இந்தப் பின்னணயில், நாம் இயேசு கூறிய திருமண விருந்து உவமையை அணுகுவோம். “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார். திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார்.” (மத். 22: 2-3) என்ற வார்த்தைகளுடன் இவ்வுவமை ஆரம்பமாகிறது.

எந்த ஒரு கலாச்சாரத்திலும் விருந்து என்பது வெறும் உணவு மட்டுமல்ல. ஒவ்வொரு விருந்துக்கும் பின்புலத்தில் பாசம், பந்தம், உறவு, நட்பு, குலப்பெருமை என்று எத்தனையோ அம்சங்களை நாம் கொண்டாடுகிறோம். அமெரிக்காவிலிருந்து இங்கு உரோம் நகர் வந்திருந்த ஓர் அருள்பணியாளரைச் சந்தித்தேன். நான் தமிழ் நாட்டிலிருந்து வந்தவன் என்பதை அவரிடம் சொன்னபோது, அவர் முகத்தில் பளீரென ஒரு புன்னகை. அவர் தமிழ்நாட்டுக்குச் சென்றபோது, அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை அசைப்போட்டார். சென்ற இடத்திலெல்லாம் மக்கள் அவரை வரவேற்ற விதம் அவரால் மறக்க முடியாத அனுபவம் என்றும் சொன்னார்.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் - என்று நம் விருந்தோம்பல் பண்பைப் பற்றி அடிக்கடி தலையை நிமிர்த்தி, நெஞ்சுயர்த்தி பெருமைப்படுகிறோம். பொதுவாகவே, இந்தியா, இலங்கை போன்ற ஆசிய நாடுகளுக்கு வருகை தரும் பலருக்கும் மனதில் ஆழமாய்ப் பதியும் ஓர் அனுபவம்... நாம் அவர்களை வரவேற்று உபசரிக்கும் பாங்கு. அதிலும், மேற்கத்தியக் கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இது முற்றிலும் புதிதான, ஏன்?... புதிரான அனுபவமாக இருக்கும். விருந்தோம்பலில், அக்கரைக்கும், இக்கரைக்கும் அப்படி ஒரு வேறுபாடு.

இஸ்ரயேல் மக்கள் மத்தியில் விருந்துக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அடிமைகளாய், அன்னியநாட்டில், கொடுக்கப்பட்ட குறைவான உணவுக்கு மிருகங்களைப் போல போட்டிபோட்டு உண்ணவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர், இஸ்ரயேல் மக்கள். அவர்களைப் பொருத்தவரை, பந்தி அமர்ந்து விருந்துண்பது என்பது, வெறும் உணவு மட்டுமல்ல, தலை சிறந்த ஒரு கனவு. விடுதலையை, பாதுகாப்பை, குடும்ப உணர்வை, நல்ல விளைச்சலை, செல்வக் கொழிப்பைக் குறிக்கும் ஓரு கனவு.

கோடை விடுமுறையான ஏப்ரல் மே மாதங்களில் திருமணங்கள் பல ஏற்பாடு செய்யப்படும். அந்த ஏற்பாடுகளின் ஒரு முக்கிய அங்கமாக, திருமண விருந்தும், அதற்கு வழங்கப்படும் அழைப்புக்களும் விளங்கும். திருமண விருந்து என்றால், அதில், இன்னும் பல ஆழமான, அழகான உணர்வுகள் வெளிப்படும்; பிரச்சனைகளும் வெடிக்கும். பலவேளைகளில், திருமண விருந்து நடக்கும் அரங்கம், ஒரு போர்க்களமாகவே மாறிவிடுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம், அல்லது, அனுபவித்திருக்கிறோம். அத்தகையதொரு சூழலை நற்செய்தியாளர் மத்தேயு தன் உவமையில் குறிப்பிடுகிறார். அரசன் ஏற்பாடு செய்திருந்த திருமண விருந்தில் ஏற்பட்ட பிரச்சனைகளையும், அவற்றின் அடிப்படையில், அரசன் எடுத்த முடிவுகளையும் அடுத்தவாரத் தேடலில் சிந்திப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.