2015-05-05 16:03:00

நேபாளப் பேரிடரில் 575 பள்ளிகள் முற்றிலும் சேதம்


மே,05,2015. நேபாளத்தில் கடந்த மாதம் 25ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் அதன் பின்னர் தொடர்ந்து எழுந்த நில அதிர்வுகளால், அந்நாட்டில் 575 பள்ளிகள் முற்றிலும் இடிந்து சேதமடைந்துள்ளதாக நேபாள கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நேபாள கல்வித் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு 969 பள்ளிகள் சேதமடைந்துள்ளன மற்றும் 575 பள்ளிகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாயின.

பக்தப்பூர் மற்றும் லலித்பூரின் 99 விழுக்காட்டுப் பள்ளிகள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. காத்மண்டுவில் உள்ள 90 விழுக்காட்டுப் பள்ளிக் கட்டிடங்கள் மாற்று வாழ்விடமாக மாற்றப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள பள்ளிகள் அனைத்தும் இம்மாதம் 15ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நேபாளத்தில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நான்காயிரத்துக்கும் அதிகமான வெளிநாட்டுப் உதவிப் பணியாளர்கள் தங்களின் நாடுகளுக்குத் திரும்பும்படி நேபாள அரசு கோரியுள்ளது.

கடும் பேரழிவுகளை ஏற்படுத்திய நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி இப்போது முடிவடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிக்காக அங்கு வந்த வெளிநாட்டவர்கள் தொடர்ந்து தங்கியிருக்கத் தேவையில்லை என நேபாள அரசு  கூறுகிறது.

மேலும், நேபாளத்துக்கு இப்போது தேவை அனுதாபமும் ஆதரவுமே தவிர விமர்சனங்கள் அல்ல எனவும் நேபாளத்தின் செய்தித்துறை அமைச்சர் மினேந்திர ரிஜால் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.