2015-05-05 15:38:00

திருத்தந்தை - இன்னல்களில் ஆண்டவரைச் சார்ந்திருக்க வேண்டும்


மே,05,2015. இன்னல்கள், இடையூறுகள் மத்தியில் தங்களைத் தாங்களே வதைத்துக்கொண்டு அதில் இன்பம் காண்பவர்களாக இல்லாமல், அந்நேரங்களில் கிறிஸ்தவர்கள், இறைவனில் நம்பிக்கையையும் பற்றுறுதியையும் கொண்டு வாழுமாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சாந்தா மார்த்தா இல்லத்திலுள்ள சிற்றாலயத்தில், இச்செவ்வாய் காலை நிறைவேற்றிய திருப்பலியில், இந்நாளைய முதல் வாசகத்தை (தி.பணி.14,19-28) மையமாக வைத்து திருத்தந்தை ஆற்றிய மறையுரை, கடுந்துன்பங்கள், எதிர்பார்ப்புகள், அமைதி ஆகிய மூன்று சொற்களை விளக்குவதாக அமைந்திருந்தது.

பவுலடிகளார் துன்புறுத்தப்பட்டாலும், அவர் விசுவாசத்தில் உறுதியாக இருந்து, கிறிஸ்தவர்களை நம் ஆண்டவரில் ஊக்கப்படுத்தினார், ஆயினும், இறையாட்சிக்குள் நுழைவதற்கு இருளான, இன்னல்கள் நிறைந்த தருணங்களைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும் என்பதையும் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவர்கள் இன்னல்களைத் துணிச்சலோடு தாங்கிக் கொள்ள வேண்டும், ஆனால் இப்படித் தாங்கிக் கொள்வது, தங்களைத் தாங்களே வதைத்து அதில் இன்பம் காணும் போக்கில் அல்ல என்றும் கூறிய திருத்தந்தை, துன்ப நேரங்களில் நாம் இயேசுவைச்   சார்ந்து இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நம் ஆண்டவரின் அமைதி நம் விசுவாசத்தையும், நம்பிக்கையையும் திடப்படுத்துகின்றது என்றும், நம் விசுவாசமும், நம்பிக்கையும் உறுதிப்படுத்தப்பட இத்திருப்பலியில் இயேசுவிடம் மன்றாடுவோம் என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், “இயேசு நம்மை உற்றுநோக்குவதை உணருவதற்கு, திருநற்கருணை பேழை முன்பாக நேரம் செலவழிப்பது நமக்கு நல்லது” என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.