2015-05-05 16:09:00

எலக்ட்ரானிக் கழிவுக் குவியல்கள் நலவாழ்வுக்கு அச்சுறுத்தல்


மே,05,2015. ஆபத்தான நச்சு கலந்த வேதியப் பொருள்கள் பயன்படுத்தப்படுவது கட்டுப்படுத்தப்பட்டு, உலகில் குவியும் எலக்ட்ரானிக் கழிவுப் பொருள்களுக்குத் தீர்வு காணப்படுமாறு ஐ.நா. அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மூன்று வேதிய ஒப்பந்தங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கென, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் இத்திங்களன்று தொடங்கியுள்ள கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா.வின் UNEP சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் செயல்திட்ட இயக்குனர் Achim Steiner அவர்கள், உலகில் எலக்ட்ரானிக் கழிவுகள், சுனாமியாகக் குவிந்து வருகின்றன எனத் தெரிவித்தார்.

மலைகளாகக் குவியும் இந்தக் கழிவுகள் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்பட முடியாதவை என்றும், இவை மனிதரின் வாழ்வுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகவும் ஆபத்தானவை என்றும் கூறினார் Steiner.

வளரும் நாடுகளில், ஏறக்குறைய ஐந்து இலட்சம் டன் உயிர்க்கொல்லி குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளன.  

உலக அளவில் வேதியப் பொருள்களும், கழிவுகளும் குறித்த Rotterdam மற்றும் Stockholm ஒப்பந்தங்கள், கார்பன் வெளியேற்றம் குறித்த பேசில் ஒப்பந்தம் ஆகியவை குறித்து ஜெனீவா கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதில் 1,500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.