2015-05-05 15:42:00

இரக்கத்தின் ஆண்டு : தந்தையைப் பின்பற்றி கருணையில் வாழ்தல்


மே,05,2015. இரக்கத்தின் புனித ஆண்டு, அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் அருளை வழங்கும் உண்மையான காலமாக அமையும் மற்றும் புதிய வழியில் நற்செய்திப் பணியைத் தொடர்ந்து ஆற்றுவதற்கும், மேய்ப்புப்பணியில் மாற்றங்கள் இடம்பெறுவதற்கும் தூண்டுலாக இருக்கும் என்று கூறினார் பேராயர் Salvatore Fisichella.

வருகிற டிசம்பர் 8ம் தேதி அமல அன்னை விழாவன்று தொடங்கி 2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி கிறிஸ்து அரசர் பெருவிழாவோடு நிறைவடையும் இரக்கத்தின் சிறப்பு ஜூபிலி ஆண்டில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளையும் எடுத்துரைத்தார் பேராயர் Fisichella.

இரக்கத்தின் சிறப்பு ஜூபிலி ஆண்டு குறித்து இச்செவ்வாயன்று செய்தியாளர் கூட்டத்தில் விளக்கிய, புதிய வழியில் நற்செய்தி அறிவிப்புப் பணியை ஊக்குவிக்கும் திருப்பீட அவைத் தலைவர் பேராயர் Fisichella அவர்கள், திருஅவை இரக்கத்தையும், கருணையையும் வழங்குவதற்கு, தணியாத ஆர்வத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்று கூறினார்.

ஜூபிலிகள் வரலாற்றில், 50 அல்லது 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜூபிலி ஆண்டுகளும், கிறிஸ்துவின் மீட்புச் செயல்களின் ஆண்டு நிறைவுகளையொட்டி இரு சிறப்பு ஜூபிலி ஆண்டுகளும் (1933,1983) சிறப்பிக்கப்பட்டுள்ளன என்றும் கூறிய அவர், இந்த இரக்கத்தின் சிறப்பு ஜூபிலி ஆண்டு, 2000மாம் மாபெரும் ஜூபிலி ஆண்டை ஒத்தது அல்ல என்றும் கூறினார்.

இரக்கத்தின் சிறப்பு ஜூபிலி ஆண்டு நிகழ்வுகள் மூன்று கூறுகளாக இடம்பெறும், முதல் நிகழ்வு, வருகிற சனவரி 19 முதல் 21 வரை திருப்பயணங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றும், திருப்பயணிகள், விசுவாசம் மற்றும் பக்தியுடன் புனிதக் கதவைக் கடந்து செல்லுமாறு கேட்கப்படுவார்கள் என்றும் விளக்கினார் பேராயர் Fisichella.   

இரக்கம், கருணை என்ற தனிவரத்தைக் கொண்டு இயங்கும் பல்வேறு இயக்கங்கள், கழகங்கள், துறவு சபைகள் ஆகியவை ஏப்ரல் 3ம் தேதி நிகழ்விலும், செப்டம்பர் 4ம் தேதி நிகழ்வில், உலகெங்கிலுமுள்ள பிறரன்பு தன்னார்வத் தொண்டர்களும், அக்டோபர் 9ம் தேதி இரக்கத்தின் அன்னை விழா சிறப்பிக்கப்படும் என்றும் கூறினார் பேராயர் Fisichella.   

தியாக்கோன்கள் தங்கள் அழைப்பையும், மறைப்பணியையும் கொண்டாடுவதற்கு மே 29ம் தேதியும், இயேசுவின் திருஇதய விழாவின் 160ம் ஆண்டு நிறைவான ஜுன் 3ம் தேதி குருக்கள், சிறப்பு ஜூபிலி ஆண்டையும் கொண்டாடுவார்கள். செப்டம்பர் 25 மறைக்கல்வியாளர்களுக்கும், ஜூன் 12 நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும், நவம்பர் 6 சிறையில் இருப்போருக்கும் அர்ரப்பணிக்கப்பட்ட நாள்களாக இருக்கும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.