2015-05-04 16:19:00

ஏழைகள் நலனில் கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து செயல்பட அழைப்பு


மே,04,2015. கிறிஸ்தவர்கள் மத்தியிலுள்ள பிரிவினைகள், கிறிஸ்துவின் விருப்பத்துக்கு மாறானவை மட்டுமல்ல, உலகிற்குத் துர்மாதிரிகையாகவும், படைப்புகள் அனைத்துக்கும் நற்செய்தி அறிவிக்கும் புனிதப் பணிக்கு இடையூறாகவும் உள்ளன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

சுவீடன் நாட்டு லூத்தரன் இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபையின் தலைவரும், உப்பசாலா பேராயருமான Antje Jackelén அவர்கள் தலைமையிலான குழுவை திருப்பீடத்தில் இத்திங்களன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒன்றிப்பு ஏற்படுவதற்கு நாம் இன்னும் அதிகம் ஆற்றவேண்டியிருந்தாலும், 2017ம் ஆண்டில் சிறப்பிக்கப்படவிருக்கும் சீர்திருத்த நினைவு நிகழ்வு, சண்டையிலிருந்து ஒன்றிப்பு என்ற தலைப்பில் லூத்தரன்-கத்தோலிக்க ஒன்றிப்பு குழு வெளியிட்ட அண்மை அறிக்கை ஆகியவை, அருளடையாள வாழ்விலும், திருஅவையின் பணியிலும் லூத்தரன் சபையினரும், கத்தோலிக்கரும் மேலும் முன்னோக்கிச் செல்வதற்கு ஊக்கப்படுத்துவதாய் அமைந்துள்ளன என்றும் கூறினார் திருத்தந்தை.

ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டவர் நலனில் கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ், தென் அமெரிக்காவின் சர்வாதிகார ஆட்சியில் பல குடியேற்றதாரர்களை சுவீடன் லூத்தரன் சபை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். 

பேராயர் Antje Jackelén அவர்கள், 12ம் நூற்றாண்டுக்குப் பின்னர் சுவீடன் கிறிஸ்தவ சபையின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள வெளி நாட்டவர் மற்றும் முதல் பெண் கிறிஸ்தவ சபைத் தலைவராவார். இவர் ஜெர்மனியைச் சேர்ந்தவர்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.