2015-05-04 16:44:00

இந்தியாவில் மத ரீதியான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன - அறிக்கை


மே,04,2015. கடந்த 2014 பொதுத் தேர்தலுக்குப் பின்னர், இந்தியாவில் மத ரீதியிலான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் அனைத்துலக‌ மதச் சுதந்திரம் தொடர்பான ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை கண்டனம் தெரிவித்துள்ளது

"2014 தேர்தலுக்குப் பின்னர் இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான அவதூறு விமர்சனங்கள், வன்முறைத் தாக்குதல்கள், ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத் தலைமையிலான கட்டாய மதமாற்ற நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. இவை ஆளும் கட்சியான பா.ஜ.க.வின் அரசியல்வாதிகள் ஆதரவுடன் நடக்கிறன" எனவும் இந்த அறிக்கை குற்றம் சுமத்தியுள்ளது.

மேலும், இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான சகிப்புத்தன்மை குறைந்து வருவது தொடர்பாக அதிபர் ஒபாமா இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அந்த ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த சனவரியில் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோது, மத வன்முறைகளால் பிரிந்து கிடக்காதவரை இந்தியாவின் வெற்றி நீளும் எனப் பேசியதும்,  கடந்த பிப்ரவரியில் வெள்ளை மாளிகையில் பேசியபோது, இந்தியாவின் மத சகிப்புத்தன்மை குறித்து கூறியதும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து வெளியுறவு செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறும்போது, "இந்தியா மீதான குறைந்தபட்ச புரிதல்கூட இல்லாது, இந்திய சமூகம், அரசியல் சாசனம் பற்றி தெளிவான புரிதல் இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையை மத்திய அரசு கண்டு கொள்வதாக இல்லை" எனத் தெரிவித்துள்ளார். 

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.