2015-05-02 15:43:00

மிலான் எக்ஸ்போவில் திருப்பீட அலங்காரப் பந்தலின் பயன்கள்


மே,02,2015. 140க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கு கொள்ளும் மிலான் அனைத்துலக கண்காட்சியில் திருப்பீடம் அமைத்துள்ள அலங்காரப் பந்தல், பார்வையாளர்கள் ஓய்வெடுக்கவும், வாழ்வுக்கு அவசியமானவற்றைக் கற்றுக்கொள்ளவும் ஏற்ற இடமாக உள்ளது என ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

ஆறு மாதங்களுக்கு நடைபெறும் மிலான் எக்ஸ்போ 2015 என்ற நிகழ்வில் திருப்பீடம் அமைத்துள்ள அலங்காரப் பந்தல், உலகளாவிய உணவுப் பாதுகாப்பு, பசி மற்றும் ஊட்டச்சத்து தொடர்புடைய கருத்தரங்குகள், ஆய்வுகள் மற்றும் கல்வியாளர் கலந்துரையாடல் இடம்பெறுவதற்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளது.

“அப்பத்தினால் மட்டுமல்ல” என்ற தலைப்பில் திருப்பீடத்தின் அலங்காரப் பந்தல், வத்திக்கான் கலாச்சார அவை, திருப்பீட கோர் ஊனும் பிறரன்பு அவை, இத்தாலிய ஆயர் பேரவை, மிலான் உயர்மறைமாவட்டம் ஆகியவை இணைந்து அமைத்துள்ளன.

இந்த அலங்காரப் பந்தலில் “எங்கள் அன்றாட உணவை எங்களுக்குத் தந்தருளும்” என்ற விவிலிய வசனம், 13 மொழிகளில் எழுதப்பட்டுள்ளது.   

உலகில் ஏதாவது ஓரிடத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை எக்ஸ்போ உலக கண்காட்சி நடத்தப்படுகிறது.

“இப்புவிக்கு உணவளித்தல் : வாழ்வுக்குச் சக்தி” என்ற தலைப்பில் மிலான் அனைத்துலக எக்ஸ்போ 2015 இடம்பெற்று வருகிறது.

வருகிற அக்டோபர் 31ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சி, 11 இலட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆறுமாத நிகழ்வை இரண்டு கோடிக்கு மேற்பட்ட மக்கள் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.