2015-05-02 16:01:00

நேபாளத்தில் பல கிராமங்கள் இன்னும் உதவிகளைப் பெறவில்லை


மே,02,2015. நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகியும், ஒதுக்குப்புறத்திலுள்ள பல கிராமங்கள் இன்னும் அடிப்படை உதவிகளின்றியே உள்ளன என்று அனைத்துலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கங்களின் கூட்டமைப்பின் பேச்சாளர் Patrick Fuller அவர்கள் கூறினார்.

வத்திக்கான் வானொலிக்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு தெரிவித்த Fuller அவர்கள்,  சில கிராமங்களுக்கு கெலிகாப்டர் மூலமாகக்கூட உதவிகள் செய்ய முடியாத நிலை உள்ளது என்றும் கூறினார்.

நேபாளத்தில் பெரிய நகரங்களில் கடைகள் திறக்கப்பட்டு, மக்கள் பயணம் செய்வதற்கு உதவியாக வாகனப் போக்குவரத்து வசதிகளும் தொடங்கப்பட்டுள்ளன என்றும் கூறினார் Fuller.

நேபாளத்திற்கு உடனடியாக நான்கு இலட்சம் கூடாரங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் இதுவரை 29 ஆயிரம் மக்களுக்குப் போதுமான குடியிருப்பு வசதிகளே அமைக்கப்பட்டுள்ளன என்று நேபாள தகவல்துறை அமைச்சர் Minendra Rijal அவர்கள் தெரிவித்தார்.

இதற்கிடையே, நேபாளத்தில் ஏற்கனவே 40 விழுக்காட்டுச் சிறார் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை எதிர்நோக்கும்வேளை, தற்போது ஏறக்குறைய 15 ஆயிரம் சிறார் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றனர் என்று யூனிசெப் கூறுகிறது.

மேலும், நேபாளத்தில்  இனிமேலும் உயிருடன் எவரும் மீட்கப்படக்கூடிய சாத்தியக்கூறு இல்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.