2015-05-02 15:40:00

கத்தோலிக்கர் தினமும் விசுவாசத்துக்குச் சான்றாக வாழ வேண்டும்


மே,02,2015. அரசியல், பொதுநலனுக்குச் சேவை செய்வதாய் இருந்தால் அது பிறரன்பின் ஊற்றாய் அமையும் என்று சிங்கப்பூர் பேராயர் William Goh Seng Chye அவர்கள் தனது மேய்ப்புப்பணி அறிக்கையில் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானில் சாந்தா மார்த்தாவிலுள்ள சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறியுள்ளது போன்று, திருஅவையின் சமூகக் கோட்பாட்டின்படி, அரசியல், பொதுநலனுக்குச் சேவை செய்தால், அது பிறரன்பின் மிக உன்னத வடிவங்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார் பேராயர் Goh.

கத்தோலிக்கர், நற்செய்தி விழுமியங்களுக்கு ஏற்ற வகையில் விசுவாசத்தைத் தங்களின் செயலில் வெளிப்படுத்துவதற்கு, உலகமும், சமுதாயமும் தளங்களாக உள்ளன என்றுரைக்கும் பேராயரின் அறிக்கை, நாட்டைக் கட்டியெழுப்புவதில் பங்கெடுப்பது கிறிஸ்தவக் கடமை என்றும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

சிங்கப்பூரின் பல்வேறு துறைகளில், குறிப்பாக, சமுதாயத்தை ஒழுக்கநெறி  விழுமியங்களில் உருவாக்குவதற்கு கத்தோலிக்கத் திருஅவை மிகவும் உயிர்த்துடிப்புடன் உதவியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் பேராயர் Goh.

சிங்கப்பூரின் தந்தை Lee Kuan Yew அவர்களின் வழியில் தற்போது நாட்டை வழிநடத்திவரும் அவரின் மகன் Lee Hsien Loong அவர்கள், அதிவேகப் பொருளாதார வளர்ச்சிக்கும், ஆழமான சமூகப் பிரிவினைகளுக்கும் இடையே ஏற்படும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறார் என்று கூறப்படுகின்றது.

சிங்கப்பூரின் தந்தை Lee Kuan Yew அவர்கள் கடந்த மார்ச் 23ம் தேதி தனது 91வது வயதில் காலமானார்.    

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.