2015-05-02 15:54:00

ஊடகத் துறையில் பாலினச் சமத்துவம் தேவை, யுனெஸ்கோ


மே,02,2015. டிஜிட்டல் உலகில் செய்தியாளர்களுக்குப் பாதுகாப்பும், ஊடகத் துறையில் பாலினச் சமத்துவமும் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளது யுனெஸ்கோ நிறுவனம்.

மே,03, இஞ்ஞாயிறன்று உலக பத்திரிகை சுதந்திர நாள் இடம்பெறுவதை முன்னிட்டு, இந்நாளை இவ்வெள்ளியன்று நினைவுகூர்ந்த யுனெஸ்கோ நிறுவனம், பணியில் இருக்கும்போது கொல்லப்பட்ட செய்தியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தியது.

2015ம் ஆண்டில் ஐ.நா. நிறுவனம் தனது 70வது ஆண்டை சிறப்பிக்கின்றது, அதோடு அனைத்துலக சமுதாயம் உறுதியான வளர்ச்சித் திட்ட இலக்குகளை மீண்டும் வகுத்துள்ளது, இவ்வேளையில் பேச்சுச் சுதந்திரத்தை வலியுறுத்துவது பொருத்தமானது என்று, ஐ.நா. பொதுத் தகவல் துறையின் நேரடிப் பொதுச் செயலர் Cristina Gallach அவர்கள் கூறினார்.

இவ்வாண்டில் உலகில் ஏற்கனவே நாற்பதுக்கும் மேற்பட்ட செய்தியாளர்களும், ஊடக அலுவலகர்களும் கொல்லப்பட்டுள்ளனர், இன்னும் பலர் பணயக் கைதிகளாக உள்ளனர் மற்றும் காணாமல் போயுள்ளனர் என்றுரைத்த Gallach அவர்கள், உலகளாவிய மனித உரிமைகள் அறிக்கையில் குறிக்கப்பட்டுள்ள பேச்சுச் சுதந்திரத்தைச் சுட்டிக் காட்டினார்.

ஆதாரம்: UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.