2015-05-01 16:36:00

தமிழக இளம் அறிவியலாளர் அமெரிக்கப் பயணத்துக்குத் தேர்வு


மே,01,2015. குமரி மாவட்டம், ரவிபுதூர் கடையைச் சேர்ந்த இளம் அறிவியலாளர் மாஷாநஸீம், அமெரிக்காவில் நடைபெறவுள்ள அனைத்துலக தொழில்முனைவோர் பயிற்சித் திட்டத்துக்காக இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் 8 பேர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

பள்ளிப் பருவத்திலேயே அறிவியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் சாதனை நிகழ்த்தியவர் மாஷாநஸீம். தனது 9வது வயதில் அறிவியல் மாதிரிகளை உருவாக்கத் தொடங்கிய இவர், இதுவரை 12 தொடர் கண்டுபிடிப்புகள் மூலம் 2 அனைத்துலக விருதுகள், 5 தேசிய விருதுகள் மற்றும் 2 குடியரசுத் தலைவர் விருதுகளைப் பெற்றுள்ளார்.

குறைந்த செலவில் குடிநீரைச் சுத்திகரித்தல், சூரிய சக்தி ஜெனரேட்டர், வாக்கிடாக் எனப்படும் நடக்கும் போதே மின்சாரம் தயாரிக்கும் கருவி, பல்புகளை தரையில் இருந்தவாறே கழற்ற உதவும் கருவி என, பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு வழிகாட்டியுள்ளார் மாஷாநஸீம்.

மேலும், நெருப்பின்றி சீல் வைக்கும் சீல் மேக்கர், அதிநவீன ரயில் டாய்லெட், எந்திர சுமைதூக்கி உள்ளிட்டவை இவரது கண்டுபிடிப்புகளாகும். தற்போது சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பொறியியல் மேற்படிப்பு பயின்று வருகிறார்.

அமெரிக்காவில் கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மோத்வனி ஜடேஜா பவுண்டேஷன் என்ற அமைப்பு "ராஜீவ் பெல்லோஷிப்' என்ற திட்டத்தை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இத்திட்டத்தின் நோக்கம், பல்வேறு நாடுகளிலிருந்து சாதனையாளர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு உலகத் தரத்தில் தொழில்முனைவோர் பயிற்சி அளிப்பதாகும்.

ஆதாரம் : தினமணி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.